மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருடம் முழுவதும் கடுமையாக உழைக்க முக்கிய காரணம் வருடத்தின் இறுதியில் கிடைக்கும் சம்பள உயர்வுக்காக தான், ஆனால் இந்த வருடம் எப்போதும் பண மழையில் ஆட்டம்போடும் ஐடி நிறுவனங்கள் எதிர்கொண்ட மந்தமான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக ஊழியர்களுக்கு கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மந்தமான வர்த்தக சூழ்நிலை காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளம், வேரியபிள் பே ஆகியவற்றில் கைவைத்துள்ளது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் எப்போதும் இல்லாமல் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது இன்போசிஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் ஆகிய இரு முக்கிய ஐடி சேவை நிறுவனங்கள் கடந்த ஒரு வருட பணிக்காக தனது ஊழியர்களுக்கு இந்த வருடம் அளிக்கப்படும் சம்பள உயர்வை அளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், இதுவரையில் சம்பள உயர்வு அளிக்கப்படவில்லை.
இன்போசிஸ் நிறுவனம் பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதம் சம்பள உயர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு சம்பள உயர்வை அளிக்கும். ஆனால் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதேபோல் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உயர்ந்துள்ள ஹெச்சிஎல் டெக் நிறுவனம் நடுத்தர மற்றும் உயர் அதிகாரிகளுக்கான இந்த வருட சம்பள உயர்வை கட் செய்துள்ளது, ஜூனியர் பிரிவு ஊழியர்களுக்கு ஒரு காலாண்டு தாமதமாக வழங்க முடிவு செய்துள்ளது.
விப்ரோ நிறுவனம் சம்பளம் உயர்வை அளிப்பதை உறுதி செய்திருந்தாலும், ஒரு காலாண்டு தாமதமாக அளிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் கொடுத்த சம்பள உயர்வு தற்போது டிசம்பர் காலாண்டில் அளிப்பதாக தெரிவித்துள்ளது.
டெக் மஹிந்திரா ஜூனியர் மற்றும் நடுத்தர ஊழியர்கள் அனைவருக்கும் கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வை கொடுத்தாலும், உயர் அதிகாரிகளுக்கான சம்பள உயர்வை மொத்தமாக கட் செய்துள்ளது.
இந்த 4 நிறுவனத்திற்கு மாறாக டிசிஎஸ் அனைத்து ஊழியர்களுக்கும், கடந்த ஆண்டை போலவே 6 முதல் 8 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை கொடுத்துள்ளது. சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டு இலக்கில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களான Coforge, Persistent Systems மற்றும் LTI Mindtree ஆகியவையும் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications