இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஜெர்மனி நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டயாம்லர் நிறுவனத்தின் ஹைப்பிரிட் கிளவுட் பவர் இன்னோவேஷன் மற்றும் ஐடி இன்பரா திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பீட்டை இன்போசிஸ் வெளியிடவில்லை என்றாலும் இதன் மதிப்பு 3.2 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பின் வாயிலாக இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 2 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது 52 வார உயர்வை அடைந்து, இன்போசிஸ் பங்கு வர்த்தக வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
அடுத்தடுத்த பெரிய ஒப்பந்தம்
இன்போசிஸ் சில வாரங்களுக்கு முன்பாக 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் வேன்கார்டு என்னும் நிறுவனத்தின் ஐடி சேவை திட்டத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து தற்போது டயாம்லர் நிறுவனத்தின் மூலம் அடுத்தப் பில்லியன் டாலர் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
52 வார உயர்வு
புதன்கிழமை காலை வர்த்தகம் துவங்கும் போதே இன்போசிஸ் பங்குகள் உயர்வுடன் துவங்கிய நிலையில் சில நிமிடங்களில் 52 வார உயர்வான 1,249.00 ரூபாயை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சரிவு பாதைக்குச் சென்ற இன்போசிஸ் பங்குகள் மீண்டும் வளர்ச்சி அடையத் துவங்கியது.
25 வருட வளர்ச்சி
இந்திய பங்குச்சந்தையில் அதிகளவிலான லாபத்தைக் கொடுத்த பங்குகளாக இன்போசிஸ் விளங்குகிறது. கடந்த 25 வருடத்தில் இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு சுமார் 688 மடங்கு அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்துள்ளதாக மோதிலால் ஆஸ்வால் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
இந்திய ஐடி துறை
இந்திய ஐடி துறையில் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றதில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. ஆனால் கடந்த சில வருடமாக இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அளவீடுகள் மந்தமாக இருக்கும் வேளையில், தற்போது மீண்டும் அதிரடி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications