இரண்டு கால்களில் நடக்கக் கற்பதற்கு முன்பே, நான்கு மாத குழந்தையான ஏக்கிரா ரோஹன் மூர்த்தி கோடீஸ்வரர் ஆகிவிட்டார். இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோரின் மகனான ரோஹன் மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு 2023 நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது
இந்த நிலையில் 3வது முறையாகத் தாத்தா ஆன நாராயண மூர்த்தி பேரனுக்கு 15 லட்சம் இன்போசிஸ் பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார், இந்த பங்குகளின் மதிப்பு ரூ.240 கோடிக்கும் மேல்!

கடந்த வாரம் பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் off-market transaction வாயிலாக 77 வயதான நாராயண மூர்த்தி தனது பேரனுக்கு 15 லட்சம் பங்குகள், அதாவது இவரின் மொத்த பங்கு இருப்பில் 0.04% பங்குகளை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசு வழங்கப்பட்ட பிறகு, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மூர்த்தியின் பங்கு இருப்பு 0.36% ஆக குறைந்துள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் பங்கின் விலை ரூ.1,620 ஆக இருப்பதால், நாராயணமூர்த்தி பேரன் ஏக்கிரா ரோஹன் ரூ.243 கோடி மதிப்புள்ள சொத்தை பெற்றுள்ளார். ஏக்கிரா நவம்பர் 10 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார்.
நாராயண மூர்த்தியின் மகனான, ரோஹன் மூர்த்தி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் தற்போது அமெரிக்காவின பாஸ்டனில் தலைமையிடமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான சொரோகோவை (Soroco) நடத்தி வருகிறார். அபர்ணா கிருஷ்ணன், மூர்த்தி மீடியா நிறுவனத்தை தலைமை தாங்குகிறார்.
ஏக்கிரா, கடந்த வாரம் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்ற சுதா மூர்த்தி மற்றும் நாராயண மூர்த்தி தம்பதியின் மூன்றாவது பேரன் ஆவார். பெங்களூரில் இருக்கும் நாராயணமூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி தம்பதிக்கு வேறு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர் - கிருஷ்ணா மற்றும் அனௌஷ்கா. இவர்கள் அக்ஷதா மூர்த்தி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரின் மகள்கள்.
டிசம்பர் காலாண்டு முடிவில், அக்ஷதா இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1.05% பங்குகளையும், சுதா மூர்த்தி 0.93% பங்குகளையும், ரோஹன் 1.64% பங்குகளையும் வைத்திருந்தனர்.
1981 ஆம் ஆண்டில், ஆறு இணை நிறுவனர்களுடன் இணைந்து என்.ஆர். நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேற இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய அசோக் அரோரா தவிர, அனைத்து இணை நிறுவனர்களும் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications