இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 7 நிறுவனர்களில் முக்கியமான இணை நிறுவனர் நாராயண மூர்த்தி-க்கு முக்கியமான பழக்கம் ஒன்று உள்ளதாம்.
இன்போசிஸ் 2022ல் 40 ஆண்டு நிறைவைப் பெரிய அளவில் கொண்டாடியது, இதேபோல் நவம்பர் மாதம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் பிரம்மாண்ட இன்போசிஸ் தலைமை அலுவலகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 7 நிறுவனர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய இன்போசிஸ் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் மத்தியில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் பல பத்திரிக்கை, தொலைக்காட்சியில் பேட்டி அளித்தனர். அப்போது ஒரு பேட்டியில் நாராயணமூர்த்தி தனது பழக்கத்தைக் குறித்துப் பேசினார்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி
இன்போசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி நேர மேலாண்மை-யின் மதிப்பு மிகவும் நன்றாகத் தெரியும் என்பதால் அதில் அவர் மற்ற மற்றும் சக ஊழியர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்பினார்.
6:20 மணி
இதனால் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பல ஆண்டுகளில், நாராயணமூர்த்தி தினமும் தனது அலுவலகத்திற்குக் காலை 6:20 மணிக்கு வந்து, இரவு 8 அல்லது 9 மணி வரை வேலை செய்யும் பழக்கத்தைக் கொண்டு இருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இரண்டு குழந்தைகள்
76 வயதான நாராயணமூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்க அதிகப்படியான நேரத்தை செலவழித்த காரணத்தால் தனது இரண்டு குழந்தைகளுடன் போதுமான நேரத்தைப் பெரிய அளவில் தியாகம் செய்தது குறித்து இந்தப் பேட்டியில் பேசினார்.
2011 வரை
இந்தப் பேட்டியில் இன்போசிஸ் நாராயணமூர்த்தித் தினமும் காலை 7 மணிக்கு இன்போசிஸ் கேம்பஸ்-க்கு வந்ததைப் பற்றிக் கேள்வி கேட்ட போது, அவர் தினமும் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிடுவேன் என நெறியாளரைத் திருத்தினார் நாராயண மூர்த்தி. இன்போசிஸ் வளாகத்திற்கு அதிகாலையில் வருவதைத் தான் 2011 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை கடைப்பிடித்த ஒரு முக்கியமான பழக்கமாகும் என நாராயண மூர்த்தி இப்பேட்டியில் தெரிவித்தார்.
தியாகம்
இன்போசிஸ் போன்ற நிறுவனத்தை உருவாக்குவதற்குத் தியாகம் என்பது மிகவும் முக்கியத் தேவை என்றும், தனது இரண்டு குழந்தைகளான ரோஹன் மற்றும் அக்ஷதாவுடன் நேரத்தைச் செலவிடுவதே தான் கைவிட வேண்டிய மிக முக்கியமான விஷயமாக இருந்தது என இப்பேட்டியில் தெரிவித்தார்.
சுதா மூர்த்தி
நாராயண மூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தி-யிடம் இருந்து 10000 ரூபாய் கடன் வாங்கி இன்போசிஸ் நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் துவங்கி 2 வருடங்கள் கம்ப்யூட்டர் இல்லாமல் இயங்கி வந்தது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
3.35 லட்சம் ஊழியர்கள்
கம்ப்யூட்டர் கூட வாங்குவதற்குப் பணம் இல்லாத நிலையில் தான் இன்போசிஸ் துவங்கப்பட்டது ஆனால் இன்று 3.35 லட்சம் ஊழியர்கள் உடன் தற்போது 80 பில்லியன் டாலர் மதிப்பை பெற்று இன்று பிரம்மாண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
நாராயண மூர்த்தி ஆரம்பம்
நாராயண மூர்த்தித் துவங்குவதற்கு முன்பு 1976ல் softronics என்னும் நிறுவனத்தைத் துவங்கினார், இந்த நிறுவனம் 1.5 வருடம் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை, பின்பு மூடப்பட்டது. இதன் பின்பு தான் தனது 7 நண்பர்கள் உடன் இணைந்து 10000 ரூபாய் பணத்துடன் இன்போசிஸ் துவங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications