2023 ஆம் ஆண்டில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் ஐடி சேவை நிறுவனம் என்றால் அது இன்போசிஸ் தான், வர்த்தகம், பங்கு மதிப்பு, நிர்வாகம் என அனைத்திலும் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. ஐடி சேவை துறைக்கான வர்த்தகம் பெறுவதில் தற்போது மந்த நிலை இருப்பது எல்லோருக்கும் தெரியும், இந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாத சிலில் பாரிக் நிர்வாகம் தோல்வியை சந்தித்து வருகிறது என்பதற்கு முக்கிய உதாரணம் அடுத்தடுத்து வெளியேறும் உயர்மட்ட அதிகாரிகள் தான்.
இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் லாபகரமாகவும், சிறப்பாக இயங்க முக்கிய காரணம் கீழ்மட்டத்தில் இருக்கும் சிறப்பான ஊழியர்கள் தான், ஆனால் அவர்களை சரியான பாதையில் வழிநடத்த மூத்த அதிகாரிகள் கட்டாயம் தேவை. இப்படியிருக்கையில் இன்போசிஸ் நிறுவனத்தில் 2022 அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 10 உயர்மட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி இந்நிறுவனத்தின் நிர்வாக துறை தலைவர் மற்றும் முன்னாள் HR பிரிவு தலைவரான ரிச்சர்ட் லோபோ தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வெளியேற உள்ளார். சமீபத்தில் தான் இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்ட போது ரிச்சர்ட் லோபோ பதவியும் மாற்றப்பட்டது.
இன்போசிஸ் நிறுவனத்தின் HR பிரிவின் தலைவரான ரிச்சர்ட் லோபோ இப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, இன்போசிஸ் சிஇஓ சிலில் பாரிக் தலைமையில் நடக்கும் முக்கியமான special projects team-ல் சேர்க்கப்பட்டார். ரிச்சர்ட் லோபோ Xavier's கல்லூரியில் MBA பட்டமும், மனிபால் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டத்தையும் பெற்றவர்.
ரிச்சர்ட் லோபோ HR பிரிவின் தலைவராக 2015 முதல் 2023 வரையில் பணியாற்றியது மட்டும் அல்லாமல், இன்போசிஸ் நிறுவனத்தில் 2000 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் செய்யப்பட்ட பொறுப்பு மற்றும் நிர்வாக மாற்றத்தில் விருப்பம் இல்லாமல் 23 வருடங்களாக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து ரிச்சர்ட் லோபோ வெளியேற முடிவு செய்துள்ளார்.
ரிச்சர்ட் லோபோ இப்பதவியில் இருந்து வெளியேறிய நிலையில் இப்பதவியில் சுஷாந்த் தரப்பன் நியமிக்கப்பட்டார். இவரும் இன்போசிஸ் நிறுவனத்தில் 2000த்தில் இருந்து பணியாற்றி வருகிறார். இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் நிர்வாக மாற்றம் சிலருக்கு சாதகமாக இருந்தாலும், பலருக்கு அது விருப்பம் இல்லாமல் செய்யப்படுகிறது, இதன் விளைவு அடுத்தடுத்து உயர்மட்ட அதிகாரிகள் வெளியேற்றம்.
இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான சார்லஸ் சலாமே (Charles Salameh) இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி, வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சங்கோமா டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராக சேர உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய டாப் 10 உயர் அதிகாரிகள் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களை விட்டு வெளியேறி உலகளாவிய ஐடி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அல்லது சிறிய இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளனர். இது இன்போசிஸ் நிறுவனத்திற்கு பெரும் போட்டியையும், நெருக்கடியையும் தரும்.
உதாரணமாக இன்போசிஸ் நிறுவனத்தில் தலைவராகப் பணியாற்றிய ரவிக்குமார், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இணைந்தார். இன்ஃபோசிஸின் முன்னாள் தலைவர் மோஹித் ஜோஷி அதன் போட்டி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா-வின் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications