பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல காலாண்டுக்குப் பின்பு பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது நல்ல விஷயமாகப் பார்க்கப்படும் வேளையில், இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக டிசிஎஸ், இன்போசிஸ் வரலாறு காணாத வகையில் அதிகப்படியான சம்பளத்தை மாணவர்களுக்குக் கொடுக்க தயாராகியுள்ளது.
கல்லூரியில் பட்டம்பெறும் மாணவர்கள் நேரடியாக பணியில் அமர்த்தப்படும் போது அவர்களை பிரஷ்ஷர்கள் என அழைப்பது வழக்கம். இப்பிரிவு ஊழியர்களுக்கு முன்பெல்லாம் 3- 3.5 லட்சம் வரையிலான தொகையை வருடாந்திர சம்பளமாக அளிக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், வேறுபட்ட தொழில்நுட்பத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்ய 'பவர் ப்ரோகிராம்' என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் இன்போசிஸ் நிறுவனம் பொதுவாக பிரஷ்ஷர்களுக்கு வழங்கும் ரூ.3-3.5 லட்சம் என்ற தொடக்க நிலை சம்பளத்தை விட இது மிகவும் அதிகமாகும்.
'பவர் ப்ரோகிராம்' என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் "கோடிங் மற்றும் மென்பொருள் சவால்கள், ப்ரோகிராம் ஸ்கில் டெஸ்டிங் மற்றும் பிற சிறப்பு திறன் சோதனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நேர்முக அல்லது கேம்பஸ் தேர்வில் சோதிக்கப்படுவார்கள்" என்று கூறப்படுகிறார்கள். மேலும் இந்த பிரிவில் தேர்வாகும் பிரஷ்ஷர்களுக்கு "இன்போசிஸ் ரூ.4-6.5 லட்சம் மற்றும் ரூ.9 லட்சம் என 2 பிரிவில் சம்பளம் வழங்குகிறது."
என்னடா இது இன்போசிஸ் பொசுக்குன்னு பிரஷ்ஷர்களுக்கு அதிக சம்பளத்தை அள்ளிக்கொடுக்கிறது என்று நினைக்க வேண்டாம், இன்போசிஸ்-ன் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ்-ன் 'பிரைம்' என்ற சிறப்பு பிரிவின் கீழ் அதிகப்படியான சம்பளத்தில் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கிறது.
டிசிஎஸ் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'பிரைம்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.9-11 லட்சம் வரையிலான சம்பளத்தை வழங்குகிறது. இந்த ஆண்டு இந்த திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI), ஜெனரேட்டிவ் AI (GenAI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) போன்ற புதிய தொழில்நுட்பங்களைச் சேர்த்து, இந்த தொழில்நுட்பத்தில் திறனுள்ள பிரஷ்ஷர்களை வலைவீசி தேடி வருகிறது.
டிசிஎஸ் தற்போது மூன்று பிரிவுகளில் புதிய பணியாளர்கள் எனப்படும் பிரஷ்ஷர்களை நியமிக்கிறது. அதில் 'நின்ஜா' என்ற பிரிவில் சுமார் ரூ.3.6 லட்சம், 'டிஜிட்டல்' என்ற பிரிவில் ரூ.7.5 லட்சம் மற்றும் 'பிரைம்' என்ற பிரிவில் ரூ.9-11 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணியாளர்களை நியமிக்கிறது.


Click it and Unblock the Notifications