பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான போல்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூருவில் ஒரு தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் கார் பிராண்டான போல்ஸ்டார் நிறுவனத்தோடு தங்களது நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருப்பதாக கூறியுள்ளது.

இதன்படி போல்ஸ்டார் நிறுவனத்திற்கு தேவையான சர்வதேச டெக்னாலஜி ஹப் மற்றும் டெவலப்மென்ட் சென்டரையும் இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரில் அமைத்து தரும் எனக் கூறியுள்ளது. இந்த மையத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான மென்பொருள் மேம்பாடுகள் மற்றும் அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம்கள் மற்றும் டெலிமேடிக்ஸ் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வில் கவனம் செலுத்தப்படும் என இன்போசிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த கூட்டாண்மை ஒப்பந்தத்தின் மூலம் போல்ஸ்டார் நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்திடம் இருந்து இன்ஜினியரிங் லேப்கள், வடிவமைப்பு ஸ்டுடியோக்கள் உள்ளிட்டவற்றை பெற இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை அமைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக போல்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற செயல்பாடுகளில் ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ள போல்ஸ்டார் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து விஷயங்களும் இந்த மையத்தில் இருந்து கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
போல்ஸ்டார் நிறுவனம் ஸ்வீடனின் கவுதம்பர்க்கை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. தங்களுடைய இந்த புதிய தொழில்நுட்ப மையத்தின் மூலம் அடுத்தடுத்து புதிய புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்வோம் என நம்புவதாக போல்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மற்றும் குளோபல் டெலிவரி லீடர்ஷிப் ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட தங்களது இன்போசிஸ் நிறுவனம் போல்ஸ்டாருடன் கைகோர்த்து இருப்பது நம்பிக்கை அளிக்கிறது என இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஜெஸ்மீர் சிங் தெரிவித்துள்ளார்.
போல்ஸ்டார் நிறுவனத்தின் கார்களுக்கான வடிவமைப்பு மற்றும் அடுத்த தலைமுறையினருக்கான புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய அனைத்திலும் இன்போசிஸ் நிறுவனம் உறுதுணையாக நிற்கும் என அவர் கூறியுள்ளார்.போல்ஸ்டார் நிறுவனம் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிதாக ஐந்து எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications