இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு 2023 ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை அறிவிக்காமல் தொடர்ந்து காக்க வைத்து வரும் வேளையில், ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு சம்பள உயர்வு கிடைக்காத கடுப்பில் இருக்கும் ஊழியர்களை சற்று தணிய வைத்துள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் ஒருபக்கம் எப்போது சம்பள உயர்வை அளிப்பது..? யாருக்கெல்லாம் சம்பள உயர்வு கொடுப்பது..? என ஆய்வு செய்து வரும் வேளையில் ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே கொடுக்க வேண்டிய காலம் வந்துள்ளது. இதனால் வேரியபிள் பே தொகைக்கான கணக்கீடும் பணிகளில் இன்போசிஸ் உயர்மட்ட நிர்வாகம் பிசியானது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இன்போசிஸ் ஊழியர்களுக்கு தங்களுடைய ஜூன் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இக்காலாண்டுக்கு சராசரியாக 80 சதவீதம் வரையிலான வேரியபிள் பே தொகை அளிக்கப்பட்டு உள்ளது. சிறப்பாக பணியாற்றிய அணிக்கும், ஊழியர்களுக்கும் 85 முதல் 90 சதவீதம் வரையிலான வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் எதிர்கால வளர்ச்சிக்கு சிறப்பான பாதையை உருவாக்கியுள்ளோம் என தெரிவித்துள்ளது. இந்த காலாண்டில் ஒட்டுமொத்த இன்போசிஸ் ஊழியர்களுக்கு சராசரியாக 80 சதவீதம் வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
இந்த வேரியபிள் பே ஒவ்வொரு நபரின் செயல்திறன், அவர்கள் பணியாற்றும் அணியின் செயல்திறன் அடிப்படையில் மாறுபடும் என்ற விளக்கத்தையும் இன்போசிஸ் கொடுத்துள்ளது. கடந்த காலாண்டில் சராசரியாக 60 சதவீத வேரியபிள் பே தொகையை மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 80 சதவீத வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளது இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது இன்போசிஸ் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வியே சம்பள உயர்வு எப்போது என்பது தான். பொதுவாக ஜூன் மாதம் அளிக்கப்படும் சம்பள உயர்வு தற்போது ஆகஸ்ட் மாதமாகியும் வழங்காதது இன்போசிஸ் ஊழியர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications