நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் சற்று முன்பு தான் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, அதன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் நிபுணர்களின் கணிப்பினை உடைத்தெறிந்த இன்ஃபோசிஸ், 5809 கோடி ரூபாய் லாபத்தினை ஈட்டியிருந்தது.
இதற்கிடையில் நடப்பு நிதியாண்டிற்கான அதன் வளர்ச்சி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 55,000 பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கவலையளிக்கும் அட்ரிஷன் விகிதம்
ஐடி துறையினை பொறுத்த வரையில் வலுவான தேவை இருந்து வருகின்றது. இதனால் அதன் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. எனினும் இந்த காலக்கட்டத்தில் கவலையளிக்கும் விதமாக தொடர்ந்து அட்ரிஷன் விகிதமும் அதிகரித்துள்ளது. இது ஐடி துறையில் திறமைக்கான போரினை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் தான் இந்த நிறுவனம் மாபெரும் பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளது.
அட்ரிஷன் விகிதம் அதிகரிப்பு
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது இந்த மூன்றாவது காலாண்டில் 25.5% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 20.1% ஆக இருந்தது. நிறுவனம் முன்னதாக நடப்பு நிதியாண்டில் 45,000 பிரெஷ்ஷர்களை மட்டுமே பணியமர்த்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், திறமைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் நிறுவனம் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக நடப்பு ஆண்டில் 55,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி விகித கணிப்பு
நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்பினை நேர்மறையாக மாற்றியமைத்துள்ளது. இது தற்போது 19.5 - 20% ஆக இருக்கலாம் என திருத்தம் செய்துள்ளது. இது முன்னதாக 16.5 - 17.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
திறமைக்கான தேவை
இதற்கிடையில் இதன் ஒப்பந்த மதிப்பும் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளதாகவும், இதன் மதிப்பு 2.53 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடரலாம் என்ற நிலையில், திறமைகளுக்கான தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
நம்பிக்கையே காரணம்
எங்களின் வலுவான வளர்ச்சிக்கு காரணம் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. டிஜிட்டல் மாற்றத்தில் அவர்களுக்கு உதவ நாங்கள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக டிஜிட்டல் மற்றும் கிளவுட் சேவைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீல் பரேக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications