இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஜூன் காலாண்டில் மிகவும் சிறப்பான லாபம், வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக இன்போசிஸ் பங்குகள் இன்று 52 வார உயர்வைத் தொட்டுள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி ஜூன் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் இல்லாத அதிகளவிலான வருவாய் அளவீட்டைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இன்போசிஸ் லாபம்
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் மார்ச் காலாண்டை விடவும் 2.3 சதவீதம் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜூன் காலாண்டில் மட்டும் இன்போசிஸ் 5,195 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. கொரோனா தொற்று இருக்கும் வேளையிலும் சிறப்பான லாபத்தைப் பதிவு செய்துள்ளது இன்போசிஸ்.
இன்போசிஸ் வருவாய்
இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் சந்தை கணிப்புகள் அளவீடுகளையும் தாண்டி, கடந்த 10 வருடத்தில் இல்லாத வருவாயை ஈட்டியுள்ளது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 6 சதவீத உயர்வுடன் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் 27,896 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது.
இன்போசிஸ் வாடிக்கையாளர்கள்
மேலும் ஜூன் காலாண்டில் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதோடு 100 மில்லியன் டாலர் பிரிவில் 2 வாடிக்கையாளர்களையும், 10 மில்லியன் டாலர் பிரிவில் 12 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையிலும் மார்ச் காலாண்டை விடவும் அதிகம்.
வருவாய் வளர்ச்சி - சலில் பாரிக்
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி அளவீடு 14-16 சதவீத உயர்வை அடையும் என இந்நிறுவனத்தின் தலைவரான சலில் பாரிக் தெரிவித்துள்ளார். முன்பு இன்போசிஸ் 12 முதல் 14 சதவீதம் வரையிலான வருவாய் வளர்ச்சி மட்டுமே இருக்கும் என அறிவித்திருந்தார்.
நாணய வருவாய் வளர்ச்சி
இன்போசிஸ் நிறுவனம் ஒவ்வொரு காலாண்டுக்கும் 4.8 சதவீதம் நிலையான நாணய வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இதுவே ஒவ்வொரு வருடத்திற்கு ஒப்பிடுகையில் 16.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இன்போசிஸ் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவு
மேலும் மிகவும் முக்கியமான இன்போசிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவு தொடர்ந்து 10 சதவீத வளர்ச்சி உடன் தற்போது 2 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைக் கையாண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications