இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல் டிசம்பர் காலாண்டு முடிவில் லாபத்தில் பெரும் சரிவை கண்ட நிலையில், இன்போசிஸ் சிறிய அளவிலான சரிவை மட்டுமே பதிவு செய்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் 14 சதவீதமும், ஹெச்சிஎல் 11 சதவீத லாப சரிவை பதிவு செய்த நிலையில் வெறும் 2 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் (அக்டோபர்-டிசம்பர் காலக்கட்டத்தில்) நிகர லாபம் 2% அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் இன்போசில் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் காலக்கட்டத்தில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.6,654 கோடியாக பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,806 கோடியாக இருந்தது. இது கிட்டத்தட்ட 152 கோடி ரூபாய் குறைவு.
இன்போசிஸ்-ன் லாபம் குறைந்தாலும் வருவாய் அளவுகள் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்திந் ஆப்ரேட்டிங் வருவாய் 9% உயர்ந்து ரூ.45,479 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இன்போசிஸ் வருவாய் ரூ.41,764 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிலையான நாணய அடிப்படையில் (constant currency) வருவாய் 1.7% வருடாந்திர அடிப்படையில் உயர்ந்தது. காலாண்டு அடிப்படையில் 0.6% வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் ஆப்ரேட்டிங் லாபம் ரூ.8,355 கோடியாக குறைந்தது. இது வருடாந்திர அடிப்படையில் 6% மற்றும் காலாண்டு அடிப்படையில் 10.7% சரிவை சந்தித்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் இக்காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்க லாப வீதம் (operating margin) 18.4%-ஆக குறைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 21.3% ஆகவும், செப்டம்பர் காலாண்டில் 21% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மார்ஜின் சரிவுக்கு முக்கியமான காரணம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய தொழிலாளர் சட்டங்களின் (labour codes) தாக்கம் தான். இதனால் சுமார் ரூ.1,289 கோடி செலவுகள் ஏற்பட்டு உள்ளது. புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21, 2025 அன்று அமலுக்கு வந்தன. இது கிராஜூவிட்டி, லீவ் போன்றவற்றில் செலவுகளை அதிகரித்தது. இதனால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஒரு முறை செலவாக ரூ.1,289 கோடி துண்டு விழுந்தது. இது ஐடி துறையில் பெரும்பாலான நிறுவனங்களை இக்காலாண்டில் பாதித்த ஒரு விஷயமாக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பெரிய ஒப்பந்தங்களை பெற்றது. இதில் 57% புதிய ஒப்பந்தங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications