இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டின் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. வழக்கம் போல் இந்திய ஐடி துறையில் முதலாவதாக டிசிஎஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், தற்போது 2வதாக இன்போசிஸ் வெளியிட்டு உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவில் இன்போசிஸ் ஒருங்கிணைந்த லாப அளவில் சுமார் 30 சதவீதம் அளவிலான வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து பங்கு முதலீட்டாளர்களையும், சக ஐடி ஊழியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லாபம்: இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் ரூ.6,128 கோடியை ஒருங்கிணைந்த லாபமாக பெற்ற நிலையில், இந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.7,969 கோடியாக உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் இன்போசிஸ் பங்குகள் 1 சதவீதம் உயர்ந்து 1429 ரூபாய் விலைக்கு முடிவடைந்துள்ளது.
வருவாய்: மேலும் நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.37,923 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.37,441 கோடியாக இருந்த நிலையில் தற்போது 1% அதிகமாகியுள்ளது.
டிவிடெண்ட்: இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களை தக்க வைத்துக்கொள்ள, 2024 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக (special dividend) 8 ரூபாய் அளிக்க உள்ளதாக என அறிவித்துள்ளது.
வருவாய் கணிப்பு: 2025 நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிலையான நாணய வருவாய் வளர்ச்சி 1 முதல் 3 சதவீதம் வரை இருக்கும் என கணித்துள்ளது. இதேபோல், நடப்பு நிதியாண்டில் ஆப்ரேட்டிங் மார்ஜின் விகிதம் 20 முதல் 22 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறது.
ஊழியர்கள் நிலவரம்: மார்ச் காலாண்டின் இறுதியில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து 3,17,240 ஆக உள்ளது. மேலும் மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதமான அட்ரிஷன் அளவு 12.6% ஆக குறைந்துள்ளது. இது டிசம்பர் காலாண்டில் 12.9% ஆகவும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் 20.9% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications