கொரோனா தொற்று மூலம் நாட்டின் பெரும்பாலான துறைகள் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு, வேலைவாய்ப்பு இழப்பு, வருமான இழப்பு, நிறுவனங்கள் திவால் எனப் பல இக்கட்டான சூழ்நிலையில் முடங்கியிருந்தது.
ஆனால் ஒரு துறை மட்டும் வழக்கத்தை விடவும் அதிகளவிலான வர்த்தகம், வருவாய், வளர்ச்சி என அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சிப் பாதையிலிருந்தது மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு என அசத்தி வருகிறது இந்திய ஐடி துறை.
இந்தச் சிறப்பான தருணத்தில் ஈட்டிய அதிகளவிலான வருமானத்தைக் கொண்டு தனது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள முன்னணி நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
இன்போசிஸ் பைபேக் திட்டம்
இதன் வாயிலாக இன்போசிஸ் பங்குகள் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் சில நாட்களுக்கு முன்பும் சுமார் 9200 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தை அறிவித்தது.
புதிய உச்சத்தில் இன்போசிஸ் பங்குகள்
இத்திட்டம் ஜூன் 25ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்போசிஸ் பங்குகள் சுமார் 1.6 சதவீதம் அதிகரித்து 1,575 ரூபாய் அளவீட்டைத் தொட்டு புதிய உச்சத்தை இன்போசிஸ் பங்குகள் அடைந்திருந்தது. இதற்கு முன்பு இன்போசிஸ் பங்குகள் 1,568.35 ரூபாய் அளவீடு தான் உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ப்ரீமியம் தொகையில் பைபேக்
இன்போசிஸ் நிறுவனம் தனது பைபேக் திட்டத்தில் ஒரு பங்கை சுமார் 11 சதவீதம் ப்ரீமியம் தொகைக்கு அதாவது 1,750 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பைபேக் திட்டத்தின் மூலம் சுமார் 5.25 கோடி பங்குகளை இன்போசிஸ் ரீடைல் சந்தையில் இருந்து வாங்குகிறது.
52 வார உயர்வு
2019 இறுதியில் இருந்து இன்று வரையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருவாயும் பெற்று வரும் காரணத்தால் இன்போசிஸ் நிறுவனத்தோடு டிசிஎஸ், டெக் மஹிந்திரா, மையின்ட்ரீ ஆகிய நிறுவனங்களும் 52 வார உயர்வை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அடைந்துள்ளது.
3 முறை பைபேக் திட்டம்
கடந்த 5 வருடத்தில் 3 முறை பைபேக் திட்டத்தை அறிவித்துள்ள இன்போசிஸ் ஒரு வருடத்தில் இந்நிறுவன பங்குகள் சுமார் 127.25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதன் மூலம் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ
இன்போசிஸ் தனது 9200 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் தனது பைபேக் திட்டத்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications