இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ், சிங்கப்பூர் கப்பல் நிறுவனமான பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் (PIL) உடன் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
கடந்த 2 வாரத்தில் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அடுத்தடுத்து 2 முக்கியத் திட்டத்தைக் கைப்பற்றி, இத்துறையின் மந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. டிசிஎஸ் 2 பெரிய திட்டங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அடுத்து எந்த நிறுவனத்தின் அறிவிப்பு வரும் என்று காத்துக் கிடந்த ஐடி ஊழியர்களுக்கு இன்போசிஸ் அறிவிப்பால் ஆனந்தக் கண்ணீரே வருகிறது.

பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கான டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் பணிகளை இன்போசிஸ் செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, எத்தனை ஆண்டுக் காலம் போன்ற முக்கியமான விவரங்களை இன்போசிஸ் வெளியிடவில்லை.
பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியாவில் வலுவான நெட்வொர்க்குகளைக் கொண்டுள்ளது. இதில் Oceania என்பது ஆஸ்திரேலியா, பிரான்ஸ் பொலினீசியா, ஹவாய். நியூ கேல்டோனியா, நியூசிலாந்து ஆகியவை அடங்கிய பகுதி தான்.
பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் உலகளாவிய ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் துறை சார்ந்த வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என இன்போசிஸ் பங்குச்சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் பசிபிக் இன்டர்நேஷனல் லைன்ஸ்-இன் தற்போதைய வாடிக்கையாளர் சேவை போர்ட்டலை மறுசீரமைக்கவும், தொடர்ந்து மேம்படுத்தக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்ப தளத்தை இன்போசிஸ் நிறுவ உள்ளது.
புதிய வர்த்தகத்தைப் பெற்ற பின்பும் இன்போசிஸ் பங்குகள் சுமார் 1.85 சதவீதம் வரையில் உயர்ந்து, ஒரு பங்கு விலை 1,653.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்போசிஸ் பங்கின் 52 வார உயர்வான விலை 1,731.00 ரூபாயாகும்.

மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களைப் பயமுறுத்தினாலும், சில மணிநேரத்தில் சென்செக்ஸ் 236.70 புள்ளிகள் சரிவுடன் 71,347.42 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
டிசிஎஸ் நிறுவனம் பின்லாந்து நாட்டின் Enento Group-க்கு டெக் சேவைகளையும், உதவிகளையும் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. Enento Group என்பது பின்லாந்து நாட்டில் இயங்கி வரும் டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் நுகர்வோர் தகவல் நிறுவனமாகும். டிசிஎஸ் நிறுவனம், இந்த நிறுவனத்திற்கு ஐடி அப்ளிகேஷன், கிளவுட், டிஜிட்டல் வொர்க்பிளேஸ், ஐடி செக்யூரிட்டி போன்ற முக்கியமான சேவைகளை வழங்க உள்ளது.
இதற்கு முன்பு டிசிஎஸ் நிறுவனம் Europ Assistance என்னும் ஐரோப்பிய நிறுவனத்தின் ஐடி ஆப்ரேட்டிங் மாடலை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் வைத்து மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் Europ Assistance மற்றும் டிசிஎஸ் மத்தியில் பாரீஸ் நகரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications