இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ல் கடந்த 18 மாதங்களாக மூத்த அதிகாரிகள் பலர் வெளியேறிச் செல்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதில் பல "இன்ஃபோசியன்கள்" போட்டி நிறுவனங்களை வழிநடத்தவும், இன்போசிஸ்-க்கு போட்டியாளராக உருவாக்கும் அளவிலான ஆதிக்க பதவியில் அமர்ந்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை இந்நிறுவனம் தனது உயர் மட்ட நிர்வாகத்தில் கட்டமைப்பில் எந்த மாற்றங்களையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், பிரத்தியேகமான பேட்டி ஒன்றில், இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரி சலில் பரிக் அவர்களிடம் கட்டமைப்பில் மாற்றங்கள் வர இருக்கின்றனவா மற்றும் மூத்த நிலை பதவிகளுக்கு நபர்கள் பணியமர்த்தப்படுவார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "எங்களிடம் மிகவும் வலிமையான தலைமை குழு உள்ளது, எனவே எங்கள் அனைத்து தலைமை பதவிகளுக்கும் உள் பணியாளர்களையே இடமாற்றியுள்ளோம். இதன் மூலம் நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும் செயல் திறனிலும் எந்த பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார். இது எங்கள் நிறுவனத்தில் மிகவும் தனித்துவமானது" என்று பதிலளித்தார்.
15 அல்லது 20 அல்லது 25 ஆண்டுகள் நிறுவனத்தில் பணிபுரிந்த தலைமை குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். இதனால் உயர் மட்டத்தில் மாற்றம் எங்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை, வெளியில் இருந்து மூத்த அதிகாரிகளை நியமிக்கும் அவசியமும் ஏற்படவில்லை என்று சலில் பாரிக் கூறினார்.
கடந்த 18 மாதங்களில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து துணைத் தலைவர்களாக இருந்த ரவி குமார், மோகித் ஜோஷி, வர்த்தக பிரிவில் தலைவராக இருந்த கே. கோபிகிருஷ்ணன் - இ.வி.பி & தலைவர், மனிதவள பரிவின் தலைவர் ரிச்சர்ட் லோபோ, கிளவுட் & இன்ஃப்ரா பிரிவின் தலைவர் மற்றும் இ.வி.பி நரசிம்ம ராவ் உள்ளிட்ட முக்கிய உயர்மட்ட பணியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
இவர்களுடன் விற்பனை பிரிவின் தலைவர் கபில் ஜெயின், CISO பிரிவின் தலைவர் விஷால் சால்வி, அக்கவுண்ட் விரிவாக்க பிரிவின் தலைவர் சார்லஸ் சலாமா, இன்டர்ஸ்ட்ரீ தலைவர் நாகேஷ்வர் செருக்கபள்ளி ஆகியோர் வெளியேறினர்.
இதனை தொடர்ந்து, கடைசியாக டிசம்பர் 2023 இல் இன்போசிஸ்-ன் தலைமை நிதி தலைவரான நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்ததை அடுத்து மூத்த தலைவர்கள் வெளியேற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
பெரிய நிறுவனத்தில் மூத்த நிலைப் பதவியில் இருப்போர் வெளியேறுவது பொதுவான விஷயம் என்றாலும், ஆச்சரியப்படும் விதமாக அடுத்தடுத்து கூட்டம் கூட்டமாக வெளியேறுவது தான் ஆச்சரியம் அளிக்கிறது. இருப்பினும், நிறுவனத்திற்கு வலுவான தலைமை அணி இருப்பதால் இன்போசிஸ் பங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் CEO ஆன எஸ்.டி. சிபுலால் குடும்ப உறுப்பினர் ஒருவர், பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்குகளின் ஒரு பகுதியை விற்பனை செய்ததைத் தொடர்ந்து, இன்போசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1.12 சதவீதம் உயர்ந்து 1471.05 ரூபாயாக உள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இன்போசிஸ் பங்குகள் 5.18 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications