இன்போசிஸ் நிறுவனம் ஸ்பேஸ் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான கேலக்ஸ் ஐ (GalaxEye )இல் 17 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேலக்ஸ் ஐ நிறுவனத்தில் 17 கோடி முதலீடு செய்ய இருப்பதாக கூறியுள்ளது.
இது போன்ற நிறுவனங்களின் முதலீடு செய்வதற்காகவே ஒரு நிதியத்தை இன்போசிஸ் உருவாக்கி வைத்துள்ளது. Infosys Innovation Fund என பெயரிடப்பட்டுள்ள இந்த நிதியம் செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான கேலக்ஸ் ஐ நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி துறையில் நவீன யுகத்திற்கு தேவையான தீர்வுகளை வழங்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முதலீடு செய்யும் எனக் கூறியுள்ளது. பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இன்போசிஸ் நிறுவனம் கேலக்ஸ் ஐ நிறுவனத்தில் இதன் மூலம் 20% பங்குகளை கையகப்படுத்தும் என தெரிகிறது.

முன்னதாக கேலக்ஸ் ஐ நிறுவனம் முதல் கட்டமாக 6.5 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி இருப்பதாக அறிவித்திருந்தது. Mela Ventures மற்றும் Speciale Invest ஆகிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துள்ளன.
அதேபோல ideaForge, Rainmatter, Navam Capital, Faad Capital ஆகிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்துள்ளன. இந்த திரட்டப்பட்ட நிதிகளைக் கொண்டு தங்களுடைய முதல் செயற்கைக்கோளான Drishti Mission ஐ , 2025 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என கேலக்ஸ் ஐ தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் முதலில் 3.5 மில்லியன் டாலர்களை முதலீடாக திரட்டியது. அப்போது ஸெரோதா நிறுவனத்தின் தலைவர் நிதின் காமத் , ஈஸ் மை ட்ரிப் நிறுவனர் பிரசாந்த் பெட்டி ஆகியோரும் இதில் முதலீடு செய்தனர். சென்னை ஐஐடி மெட்ராஸ் ஆய்வகத்தில் இருந்து தொடங்கப்பட்ட நிறுவனம் தான் கேலக்ஸ் ஐ.
இது அனைத்து செயற்கைக்கோள் ஏவி டேட்டா செட்டுகளை உருவாக்கி பல்வேறு துறைகளுக்கும் வழங்க இருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து செயல்படும் வகையிலான டேட்டா செட்டுகளை இது வழங்க இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் தரவுகளை பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, சுரங்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications