பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி IT தொழில்நுட்டப நிறுவனமான இன்ஃபோசிஸ் 2026-ஆம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வை ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கத் தொடங்கியுள்ளது. அதே வேளையில் பிற ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் மற்றும் விப்ரோ ஆகியவை ஊதிய உயர்வில் சற்று கவனமாகவே முடிவு எடுத்து வருகின்றன.
இந்நிறுவனங்கள் சற்று மந்தமான வணிகச் சூழல் நிலவி வருவதால், ஊதிய உயர்வை சற்று தாமதமாக வழங்குவது போல தெரிகிறது. இன்போசிஸ் நிறுவனம் 2026-ஆம் நிதியாண்டில் 20,000-த்திற்கும் அதிகமான புதிய பட்டதாரிகளை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் 15,000 முதல் 20,000 வரையிலான புதிய பணியாளர்களை பணியமர்த்த இலக்கு வைத்திருந்தது. இந்த இலக்கையும் நிறுவனம் எட்டியது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விவரங்களைக் கூறும் விதமாக நடத்தப்பட்ட கான்ஃபரன்சில் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஜெயேஷ் சங்கராஜ்கா, "நாங்கள் எங்கள் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மும்மரமாக செயல்பட்டு வருகிறோம். பெரும்பாலான ஊதிய உயர்வுகள் ஜனவரி மாதமே வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நபர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும். 2026-ஆம் நிதியாண்டில் 20,000-த்துக்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்", என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனமோ, இந்த நிதியாண்டுக்கான ஊதிய உயர்வை சற்று தள்ளி வைப்பதாக அறிவித்திருக்கிறது. ஒரு வேளை ஊதிய உயர்வு வழங்கப்படுவது சுற்று தாமதமாகலாம் அல்லது வழங்கப்படாமலும் இருக்கலாம். வணிகச் சூழலை பொறுத்தே வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் 2026-ஆம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு விப்ரோ நிறுவனம் ஊதிய உயர்வை வழக்கமாக வழங்குவதற்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே வழங்கியது. அதேபோல 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் ஊதிய உயர்வை வழங்கியது. அதிலிருந்து 1 வருடத்திற்குள் மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக வரிகளால் கடுமையான பொருளாதார நிச்சயமற்றத் தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனங்களின் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவனங்களில் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் செலவுகளை குறைக்க தொடங்கியதால் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊதிய உயர்வு மற்றும் புதிய பணியாளர் சேர்க்கை ஆகியவற்றில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மார்க் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் 199 பணியாளர்களை அதிகமாக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 6388 புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications