இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகளில் லாப அளவு வருடாந்திர அடிப்படையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து 7,823 கோடி ரூபாயைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7,364 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருக்கும் வேளையில் சுமார் 460 கோடி அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் வருவாய் அளவு 11 சதவீத உயர்வுடன் 49,244 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆனால் முதலீட்டாளர்களுக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் 2027ஆம் நிதியாண்டில் நிலையான நாணய மதிப்பீட்டில் வருமான அளவு முன்பு கணிக்கப்பட்ட 1.5- 3 சதவீதம் வரையிலான வளர்ச்சி என்பது 1 - 2 சதவீதமாகக் குறைத்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.
இதற்காகக் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் சந்தையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் குறைந்திருக்கும் வேளையில் கணிப்புகள் குறைக்கப்பட்டு உள்ளது என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வருவாய் வளர்ச்சி கணிப்பு குறைந்தாலும் நடப்பு நிதியாண்டில் ஆப்ரேட்டிங் மார்ஜின் என்பது 20-22 சதவீதம் வரையில் நிலையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
வருவாய் வளர்ச்சி குறித்த கணிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரியதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்கள் வெளியேற்றத்தைக் குறைக்க ஒரு பங்கிற்கு 26 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். இதற்கான ரெக்கார்டு தேதியாக நவம்பர் 3ஆம் தேதியை அறிவித்துள்ளது.
வருமான கணிப்பை இன்போசிஸ் நிர்வாகம் குறைத்திருந்தாலும் செப்டம்பர் காலாண்டில் பல பெரிய திட்டங்களைக் கைப்பற்றியது மூலம் மொத்த ஆர்டர் புக் மதிப்பு 5.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அடுத்தாக அனைத்து முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் ஏஐ பிரிவு வருவாய் என்பது ஜூன் காலாண்டு அளவில் இருந்து சுமார் 29 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது மொத்த வருவாயில் 10.5 சதவீத அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவிலும் ஏஐ பிரிவு வருவாய் பங்கீடு 10 சதவீதமாக இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஏஐ பிரிவில் டாப் 2 நிறுவனங்களும் பெரிய அளவில் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 4,480 பேர் அதிகரித்து தற்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,32,542 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications