இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பல அதிரடி கருத்துக்களை தெரிவித்து டிரெண்டாகியிருக்கும் வேளையில் தற்போது அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக நாடுகளில் நடப்பதைப் போலவே இந்தியாவிலும் காலநிலை மாற்றம் அதாவது கிளைமேட் சேஞ்ச்-ன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா மீதான அதன் தாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி.

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி, வெப்பநிலை அதிகரிப்பதால் நாட்டின் சில பகுதிகள் மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாற மாறும் அபாயம் உள்ளதாகவும், இதனால் இத்தகைய பகுதிகளில் இருந்து மக்கள் பெங்களூரு, புனே, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு பெருமளவில் இடம்பெயர்வு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.
இந்த இடம்பெயர்வு பெரு நகரங்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் டிராபிக், சுற்றுசூழல், ரியல் எஸ்டேட் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும். இத்தகைய பிரச்சனைகளை சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்போசிஸ் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனே ரியல் எஸ்டேட் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில், அதிகப்படியான மக்கள் இடம்பெயர்வது மூலம் வாடகை வீடுகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரிக்கும். இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை அதிகரித்து வாடகை அதிகரிக்கும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பு, மோசமான வானிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்றும் நாராயணமூர்த்தி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள், இந்தியாவில் உள்ள சில பகுதிகள் வசிக்கத் தகுதியற்றதாக மாறக்கூடும், இதனால் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் தொகை சிறப்பான வாழ்விடம் கொண்ட பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இதனால் ஏற்படும் சவால்களை தீர்க்கும் வகையில் கார்ப்ரேட் நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளையில் இந்த பிரச்சனைகளை கையாள வேண்டிய அவசரத்தையும் சுட்டிக்காட்டினார் நாராயணமூர்த்தி. இந்தியா இந்த சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications