இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ-வில், கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தொற்றுநோய்க்குப் பிறகு டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக டெக் சேவைக்காக முதலீடு செய்யும் தொகை பெரிய அளவில் குறைந்ததே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தொற்றுநோய்க்குப் பின்னர், டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால், திறமையான ஊழியர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக் போன்ற டாப் ஐடி சேவை நிறுவனங்கள் எப்படி ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தை கொடுத்து பணியில் அமர்த்தியதோ, இதேபோல் மூத்த அதிகாரிகளுக்கு வர்த்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்காக சம்பளத்தை அள்ளிக்கொடுத்தது.
இதனால் திறமையான பணியாளர்களுக்கான போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், உலகளாவிய பொருளாதார குறைபாடு மற்றும் புவிசார் அரசியல் போன்ற காரணங்களால் இந்த போட்டி விரைவாக குறைந்துவிட்டது. இதேவேளையில் தான் ஒவ்வொரு ஐடி சேவை நிறுவனமும் சக ஐடி சேவை நிறுவனத்தில் இருந்து திறமையான உயர் அதிகாரிகளை ஈர்க்கும் படலத்தில் இறங்கியது.
இந்த நிலையில் நாட்டின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸில் கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 16% குறைந்துள்ளது. 2022 நிதியாண்டில் 123 ஆக இருந்த கோடீஸ்வர ஊழியர்கள் எண்ணிக்கை, 2024 நிதியாண்டின் இறுதியில் 103 ஆகக் குறைந்துள்ளது.
இதேபோல், விப்ரோ நிறுவனத்திலும் கோடீஸ்வர ஊழியர்களின் எண்ணிக்கை 12% குறைந்து காணப்படுகிறது. 2022 நிதியாண்டில் 92 ஆக இருந்த அளவு, 2024 நிதியாண்டில் 81 ஆகக் குறைந்துள்ளது.
250 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறையில் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் நீண்ட காலமாக வட்டியை குறைக்காத காரணத்தால் டெக் சேவைகாக செலவிடுவது பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்த சூழலில், முன்னணி ஐடி ஏற்றுமதி நிறுவனங்களில் அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, ஐடி துறையில் இருக்கும் உண்மையான நிலவரத்தை காட்டுகிறது. இதேபோல் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களில் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்படவில்லை.
2024 நிதியாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ₹1 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் 12 புதிய ஊழியர்கள் இணைந்துள்ளனர். மறுபுறம், விப்ரோ நிறுவனத்தில் 2024 நிதியாண்டில் ₹1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளம் பெறும் 8 ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications