இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக புகழ்பெற்ற நட்சத்திர வீரருமான விராட் கோலி, மைதானத்தில் மட்டுமின்றி, சொத்து முதலீடுகளிலும் சிக்ஸர் அடித்துள்ளார். சமீபத்தில், கோலி தனது குர்கான் இல்லத்தின் 'பொது அதிகாரப் பத்திரத்தை' தனது சகோதரர் விகாஸ் கோலிக்கு மாற்றிக் கொடுத்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது பிரமாண்டமான சொத்துக் குவிப்பு பற்றிய விவரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அந்த வகையில், சுமார் ரூ.1,020 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் கோடீஸ்வர விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழும் விராட் கோலியின் ஆடம்பரமான வீடுகள் மற்றும் சொத்துகளின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

குர்கானில் ரூ.80 கோடியில் பங்களா : விராட் கோலியின் சொத்துப் பட்டியலில் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுவது, அவரது குர்கான் பங்களா ஆகும். சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.80 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பங்களா சுமார் 500 சதுர யார்ட்ஸ் (Square Yards) பரப்பளவில் அமைந்துள்ளது.
மேலும், நவீன காலத்து அரண்மனை போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பங்களா, நேர்த்தியான வடிவியல் அமைப்புகளுடன் காட்சி அளிக்கிறது. இங்கு ஒரு கலைநயம் மிக்க பார் வசதியும், அதனுடன் இணைந்த நீச்சல்குளமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. விராட் கோலி சமீபத்தில் இந்த குர்கான் வீட்டின் நிர்வாகப் பொறுப்பை, தனது சகோதரர் விகாஸ் கோலிக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடு : அதேபோல் விராட் கோலியும் அவரது மனைவி, பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் மும்பை நகரின் மையப்பகுதியில் ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பைப் வைத்துள்ளனர்.
இது மும்பையின் வொர்லி பகுதியில் அமைந்துள்ள 'ஓம் காரா 1973' (Omkara 1973) என்ற கட்டிடத்தின் 35-வது மாடியில் உள்ளது. கடல் காட்சி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சுமார் ரூ.34 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது சுமார் 7,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும். இந்த வீட்டில் இருந்தவாறே மும்பையின் ரம்மியமான கடல் காட்சியை ரசிக்க முடியும்.
விடுமுறை இல்லம் : அதேபோல் விராட் கோலி, மும்பைக்கு அருகில் உள்ள பிரபலமான விடுமுறை இடமான அலிபாக்கில் ஒரு சொகுசு விடுமுறை இல்லத்தை வைத்துள்ளார். இந்த விடுமுறை இல்லத்தின் மொத்த மதிப்பு ரூ.32 கோடி ஆகும். இந்த வீட்டை வாங்குவதற்காக அவர் 8 ஏக்கர் நிலத்தை ரூ.19.24 கோடிக்கு வாங்கினார். அதன் கட்டுமானப் பணிகளுக்காக மேலும் ரூ.13 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்த வீடு 10,000 சதுர அடி பரப்பளவில் விரிந்து பரந்த தோட்டங்களையும், ஒரு பெரிய நீச்சல்குளம் மற்றும் ஜக்குஸி போன்ற பல்வேறு சொகுசு வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. அந்தவகையில், விராட் கோலியின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ.1,020 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், விராட் கோலி மைதானத்தில் காட்டும் ஆக்ரோஷமான ஆட்டத்தைப் போலவே, ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆடம்பர வாழ்வின் அடையாளமாக திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications