பெங்களூரு: ஒரு மாம்பழ வியாபாரியின் மகன் ரூ. 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ்கிரீம் பார்லருக்கு ஓனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம் அப்படிப்பட்ட ஒருவரின் சுவாரசிய கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் முழ்கி மாவட்டத்தில் ஒரு மாம்பழ விற்பனையாளருக்கு மகனாக பிறந்தார் ரகுநந்தன். இளமையில் வரும் வறுமை பலபேரை எங்கெங்கோ கொண்டு சென்று நிறுத்தி விடும், சிலர் அதிலும் வெற்றி நடை போட்டு வறுமையை வென்று வாழ்க்கையிலும் தங்களுடைய பிசினஸிலும் வெற்றி பெறுகின்றனர் அப்படிப்பட்ட ஒருவர் தான் ரகுநந்தன்.

தற்போது உள்ள தலைமுறையினருக்கு இது நன்றாக தெரிந்திருக்கும். படித்து முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஒவ்வொரு நிறுவனங்களிலும் போட்டி போட்டு நேர்காணலுக்கு அத்தனை பேர் காத்திருக்கின்றனர். அதில் உள்ளே புகுந்து ஒரு நிறுவனத்தில் தேர்வாவது என்பதே பெரிய சவாலாக இருக்கிறது. அதேபோல தான் பல பேருடன் போட்டியிட்டு இவரும் ஒரு பிராண்டை உருவாக்கி, அதை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளார். அதற்கு அவர் என்னென்ன பாடுபட்டு இருப்பார் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
1984 ஆம் ஆண்டு நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் என்ற தயாரிப்பை ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் தொடங்கினார். இன்று நாட்டின் பல பகுதிகளில் இந்த பிராண்ட் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பிடித்துள்ளது. முதன் முதலில் ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கும்போது சுமார் 12 ப்ளேவர்களில் ஐஸ்கிரீம்களை வழங்கி உள்ளார்.
ரகுநந்தன் தன்னுடைய 14வது வயதில் மங்களூவில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார். அங்கு அவரது சகோதரரின் உணவகத்தில் பணிபுரிந்தார். அப்போது ரகுநந்தனுக்கு ஒரு யோசனைத் தோன்றியுள்ளது. அது என்னவென்றால்.. உண்மையான பழங்களை வைத்து ஐஸ்கிரீம் தயாரிப்பது தான். சந்தையில் இது போன்ற ஐஸ்கிரீம் பார்லர்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட ரகுநந்தன், வாடிக்கையாளர்கள் வருவார்களா இல்லையா.. என்று கூட தெரியாமல் பாவ்-பாஜியை முக்கிய உணவாகவும், கூடுதலாக ஐஸ்கிரீமையும் சேர்த்து வழங்கி தனது தொழிலைத் தொடங்கியுள்ளார்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப சிறியதாய் உருவாக்கிய ஒரு பிசினஸ் தற்போது ரூ. 400 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது. பெங்களூரு, கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற பகுதிகளிலும் இந்த பிராண்ட் தனி இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு சொந்தமாக, இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 165 ஐஸ்கிரீம் பார்லர்கள் உள்ளன. அன்று 12 ப்ளேவர்களில் வழங்கப்பட்ட ஐஸ்கிரீம் இன்று 125க்கும் மேற்பட்ட பிளேவர்களில் கிடைக்கிறது.
இந்நிலையில் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் பிராண்ட்-இன் நிறுவனர் ரகுநந்தன் காமத் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தியாவின் "ஐஸ்கிரீம் மேன்" என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் ரகுநந்தன் ஸ்ரீநிவாஸ் காமத் வெள்ளிக்கிழமை அன்று மரணம் அடைந்தார்.


Click it and Unblock the Notifications