நீண்ட காலமாகவே சாமானியர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் பிறரிடம் கடன் பெற்று.. பிறகு அதை அடைக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். சிலர் இதற்கு நகைகளை பயன்படுத்தினர். காலம் செல்ல செல்ல வங்கிகளில் லோன் பெற்றனர். அடுத்தபடியாக தற்போது ஸ்மார்ட் ஃபோனை வைத்துக்கொண்டு இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலம் கடன் பெற்று வருகின்றனர். இந்த லோன் ஆப்-இல் ஒரு சில கிளிக்குகளில் லோன் பெறலாம். அப்படி வாங்குபவர்களுக்கு என்னவோ இதன் பின்னால் இருக்கும் ஆபத்து தெரிவதே இல்லை.
பல நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் நிம்மதியை இழக்க செய்வதே இந்த இன்ஸ்டன்ட் லோன் அப்ளிகேஷன்கள் தான். சமீபத்தில் இது தொடர்பான ஒரு அறிக்கை வெளியானது. அதில் லோன் ஆப்களின் பின்னணியில் இருக்கும் கசப்பான உண்மை தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் "தி டார்க் ரியாலிட்டி பிஹைண்ட் இந்தியாஸ் டிஜிட்டல் லெண்டிங் பூம்" என்ற அறிக்கை வெளியானது. அதில் சுமார் 72 சதவீத கடன் பெற்றவர்கள் இந்த டிஜிட்டல் ஆப்களின் மூலம் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. நம்மூர் GEN Z தலைமுறைகளிடம் தற்போது ஒரு தேவையற்ற விஷயம் டிரெண்டாக தொடங்கி இருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் புது ஸ்மார்ட் போன் அல்லது கேஜெட்டுகள் வெளியானால் உடனே அதை வாங்கி விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்காக பெற்றோரிடம் பணம் கேட்பதையெல்லாம் தாண்டி டிஜிட்டல் ஆப்களில் லோன் பெறுகின்றனர். இதைத்தான் அந்தந்த நிறுவனங்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
வெளியான அறிக்கையில் முதல் முறையாக கடன் பெறும் இளைய தலைமுறையினரின் பங்கு 41% இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் 46 சதவீதம் பேர் உண்மையிலேயே அவசரத்திற்காக கடன் பெறவில்லை. மாறாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் புதிய எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதற்கே கடன் பெற்றிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
இதில் பர்சனல் லோன் பெறுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருக்கிறது. பர்சனல் லோன் பெரும் பெரும்பாலானோர் வாழ்க்கை செலவுகளை ஈடுகட்டவும், தங்கள் வீட்டிற்கு மெயின்டனன்ஸ் ஒர்க் செய்யவும் கடன் பெற்றுள்ளனர். பொதுவாக வங்கிகளில் 10 முதல் 20 சதவீத வட்டியில் பர்சனல் லோன் கிடைக்கிறது. ஆனால் இன்ஸ்டன்ட் லோன் ஆப்-பின் வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா? கேட்டால் தலை சுற்றும்.
சுமார் 45 சதவீத கடன் பெற்றவர்களிடம் கேட்கும்போது உண்மையிலேயே அவர்கள் வருடத்திற்கு 25 சதவீதத்திற்கும் அதிகமாக தங்களிடம் இன்ஸ்டன்ட் லோன் ஆப் நிறுவனங்கள் வட்டி வசூலித்ததாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கடன் வழங்காத சில போலி ஆப்-களில் ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 700 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. நம்மூரில் மீட்டர் வட்டி, கந்து வட்டி போன்றவற்றையெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அதை விட இது பல மடங்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வளவு வட்டிக்கு கடன் பெறுபவர்களையும் லோன் ஆப் நிறுவனங்கள் விட்டு வைப்பதில்லை. வாங்கிய கடனை 7 முதல் 14 நாட்களுக்குள் திருப்பி செலுத்திய ஆகவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கத் தொடங்குகிறார்கள். அவசரத்திற்கு கடன் பெறுபவர்கள் கையில் பணமில்லாததால் தான் வட்டி அதிகமாக இருக்கும் சூழலிலும் கடன் பெறுகின்றனர். அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி 7 முதல் 10 நாட்களுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியும். இதை அடைப்பதற்காக அவர்களும் வேறு வழியின்றி வேறொரு லோன் ஆப்பை தேடி செல்கின்றனர். இப்படியே இது தொடர்கதையாகி ஒரு சங்கிலி தொடர் போல நீண்டு கடன் பெறுபவர்களை மீள முடியாத நிலைகுத் தள்ளி விடுகிறது.
வட்டி தான் அதிகம் என்று பார்த்தால் இதில் மறைமுக கட்டணங்கள், லோனை சரியான நேரத்தில் செலுத்தாததற்கான அபராதம் என மேலும் மேலும் வட்டி மற்றும் அசலை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.
டேட்டா திருட்டு: வட்டி ஒருபுறம் இருந்தாலும் மற்ற விஷயத்தையும் இந்த இன்ஸ்டன்ட் லோன் ஆப் நிறுவனங்கள் செய்கின்றன. ஒரு சில லோன் ஆப்பை இன்ஸ்டால் செய்யும்போதே உங்களுடைய காண்டாக்ட் லிஸ்ட் மற்றும் கேலரியில் உள்ள புகைப்படங்களுக்கு பர்மிஷன் கேட்கும். அதை கடன் பெற்றவர்கள் பார்த்திருப்பீர்கள். நாமும் அவசரத்திற்கு பணம் வரும் போது அதை யோசிக்காமல் "அலோ" என்று கொடுத்து விடுவோம். இதுதான் பிற்காலத்தில் கடன் பெற்றவருக்கு சிக்கலாக அமைகிறது.
பணத்தை திருப்பி செலுத்த கொஞ்சம் தாமதமானாலும் உங்களுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். அது மட்டுமா உங்களுடைய உறவினர்களுக்கு மெசேஜ் செய்து கடன் பெற்றவர் சரியாக திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே வட்டி சுமையில் இருக்கும் கடன் பெற்றவர்களை இப்படி மேலும் மேலும் அசிங்கப்படுத்துவதே இது போன்ற ஆப்களின் வாடிக்கையாக மாறிவிட்டது.
அதேபோல சமீபத்தில் ஒரு குழு இணைந்து 10,000 பாதிக்கப்பட்ட கடன் பெற்றவர்களிடம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. 72% கடன் பெற்றவர்கள், பணத்தை வசூலிக்கும் ஏஜென்ட்கள் மூலமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறியுள்ளனர். அதேபோல 67 சதவீதம் பேருக்கு தொடர்ந்து பல நம்பரிலிருந்து போன் கால்கள் வந்துள்ளன.
இதில் 11% கடன் பெற்ற நபர்களின் வீடுகளை கண்டுபிடித்து அங்கு சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதோடு மட்டும் நிற்கவில்லை. அவர்கள் பணி புரியும் அலுவலகங்களுக்கே நேரில் சென்று பணத்தை வசூல் செய்துள்ளனர். இந்த விபரங்கள் எல்லாம் லோன் ஆப் நிறுவனங்களுக்கு எப்படி தெரியும் என்றுதானே யோசிக்கிறீர்கள். நீங்கள் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும்போதே அவர்கள் உங்களுடைய முழு விவரங்களையும் பெற்ற பின்னர் தான் உங்களுக்கு கடனே வழங்குவார்கள். அதில் நீங்கள் லோன் ஆப்பை இன்ஸ்டால் செய்தவுடன் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு விவரங்களை வழங்குவீர்கள். அதில் உங்களுடைய அட்ரஸ் தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு.. இதை மட்டுமே வைத்துக்கொண்டு மிரட்டி பணம் பறிக்க தொடங்கி விடுவார்கள். இதில் எட்டு சதவீதம் பேருக்கு போலியாக நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பியது போல அனுப்பி உள்ளனர். சில ஏஜெண்டுகள் காவல்துறை அதிகாரிகள் போலவும் பேசி பணத்தை வாங்கியுள்ளனர். இந்த கொடுமைகளில் எல்லாம் தப்பித்து சிலர் மீண்டு விடுவார்கள். ஆனால் சிலர் அவமானம் தாங்காமல் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.
இதை எல்லாம் தடுப்பதற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், புகார்கள் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. ஐந்து நிமிடத்தில் கடன் தருகிறோம், பத்து நிமிடத்தில் கடன் தருகிறோம்... என்று கூறும் விளம்பரங்களை எல்லாம் மக்கள் பார்த்துவிட்டு ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும். இது போன்ற போலி ஆப் நிறுவனங்களை ஓட விட முடியும்.


Click it and Unblock the Notifications