உலகின் முன்னணி சிப் (chip) உற்பத்தியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் இன்டெல் நிறுவனம், (Intel) கணினி தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கியமான மையமாக திகழ்கிறது. இந்த நிறுவனம், முதலில் மெமரி சிப் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாலும், பின்னர் மைக்ரோபிராசஸர்கள் உற்பத்தியில் உலகளவில் முன்னணி வகித்தது.
இன்டெல் நிறுவனம் உருவாக்கிய x86 மைக்ரோபிராசஸர்கள் உலகில் பெரும்பாலான கணினிகளில் (PCs) பயன்படுகின்றன. நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப நவீனமயமாக்கலுடன் இன்டெல் நிறுவனத்தின் பங்களிப்பு தனிப்பட்ட கணினிகள், லேப்டாப்-கள் மற்றும் தற்போதைய ஏ.ஐ. 5G போன்ற துறைகளிலும் மிகுந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை இந்நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தான், இன்டெல் (Intel), 2025ஆம் ஆண்டிற்குள் சுமார் 24,000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் சுமார் நான்கில் ஒரு பங்காகும். இன்டெலின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான லிப்-பூ டான் (Lip-Bu Tan), செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு முடிவில் இன்டெல் நிறுவனத்தில் 99,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர். 2025 முடியும் வரை, இந்த எண்ணிக்கை 75,000 ஆக குறைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி, நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் "இவை கடினமான முடிவுகள் தான். ஆனால், அவசியமானது" என்று தெரிவித்துள்ளார். இரண்டாம் காலாண்டில், மேலாளர் நிலை பணியாளர்களில் 50 சதவீதம் வரை வேலைநீக்கம் செய்யப்பட்டது. இதற்காக, 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் மறுசீரமைப்பு செலவுகள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்டெல் நிறுவனம் 2025 ஜூன் காலாண்டில் மட்டும் 2.9 பில்லியன் டாலர் நஷ்டம் காண்கிறது. இது மொத்தமாக 6-வது தொடர் காலாண்டு நஷ்டம் ஆகும். ஒருகாலத்தில் சிறந்த சிப் உற்பத்தியாளர் என மதிக்கப்பட்ட இன்டெல் நிறுவனம், இப்போது ஏஐ சிப்களில் முன்னேறும் AMD, Nvidia போன்ற நிறுவனங்களை விட பின்னோக்கிப் போகும் நிலையில் உள்ளது.
இந்த சூழலில் இன்டெல் நிறுவனம் ஜெர்மனியில் உருவாக்க திட்டமிட்டிருந்த பில்லியன் டாலர் மதிப்புள்ள "மேகா-ஃபாப்" தொழிற்சாலை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், போலாந்தில் 2,000 பேருக்கான கூடுதல் சோதனை மற்றும் தயாரிப்பு நிலையத் திட்டத்தையும் கைவிட்டுள்ளது. இதற்கு பதிலாக கோஸ்டா ரிகாவில் உள்ள பணிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கோஸ்டா ரிகாவில் 3,400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், Intel தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும் முயற்சியில், செலவுகளை குறைக்கவும், முக்கிய இடங்களில் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications