உலகளவில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் கிரிப்டோகரன்சி ஊழலின் பின்னணியில் செயல்பட்டதாக கம்போடியாவின் 'பிரின்ஸ் குழுமத்தின்' (Prince Group) நிறுவனர் சென் ஷி (Chen Zhi) மீது அமெரிக்க அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 14 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.1,16,800 கோடி) அதிகமான, அதாவது 1,27,000 பிட்காயினை அமெரிக்க அரசாங்கம் முடக்கியுள்ளது. இது, வரலாற்றிலேயே மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
அதே சமயம், பிரிட்டன் மற்றும் கம்போடியாவைச் சேர்ந்த சென் ஷியின் வர்த்தக அமைப்புகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து தடை விதித்துள்ளன. இதில், பிரிட்டன் அரசாங்கம் லண்டனில் உள்ள 19 சொத்துகளை முடக்கியுள்ளது. இவற்றில், சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள மத்திய லண்டன் அலுவலகக் கட்டிடம், வடக்கு லண்டனில் உள்ள ஒரு மாளிகை மற்றும் 17 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும்.

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென் ஷி, தனது பன்னாட்டுக் குழுமமான பிரின்ஸ் குழுமத்தின் கீழ், சைபர் மோசடி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், நிதி மோசடி சதி மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மோசடி நடந்தது எப்படி..? முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகப் பொய் வாக்குறுதி அளித்து, இணையம் மூலம் பலரைத் தொடர்பு கொண்டு கிரிப்டோகரன்சியை மாற்றும்படி சென் ஷியின் குழு ஏமாற்றியுள்ளது. சென் ஷியின் வழிகாட்டுதலின் கீழ், கம்போடியாவில் குறைந்தது 10 கள்ளச் சந்தை வளாகங்களை இந்தக் குழு கட்டியுள்ளது.
வெளிநாட்டினரைச் சட்டபூர்வமான வேலைக்கான வாக்குறுதியுடன் ஈர்த்து, பின்னர் அவர்களை இந்த சிறை போன்ற வளாகங்களில் அடைத்து, சித்திரவதை செய்து ஆன்லைன் மோசடிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தி ஆள் கடத்தல் செய்துள்ளனர்.
இந்த வளாகங்களில், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டவர்களை அடைய Phone Farms எனப்படும் அமைப்புகளை சென் ஷியின் கூட்டாளிகள் அமைத்துள்ளனர். சில வசதிகளில் 1,250 மொபைல் போன்களைப் பயன்படுத்தி சுமார் 76,000 சமூக ஊடகக் கணக்குகளைக் கொண்டு மோசடிகள் நடத்தப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பு வளர்க்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் அடங்கிய ஆவணங்களும் தற்போது கிடைத்துள்ளன. இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தை சென் ஷியும் அவரது கூட்டாளிகளும் ஆடம்பரப் பயணங்கள், பொழுதுபோக்கு, விலையுயர்ந்த கடிகாரங்கள், தனியார் விமானங்கள் மற்றும் நியூயார்க் ஏல மையத்தில் வாங்கிய பிக்காசோ ஓவியம் போன்ற கலைப் பொருட்கள் உள்ளிட்ட ஆடம்பரமான கொள்முதல்களுக்குப் பயன்படுத்தியதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
சென் ஷி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் Yvette Cooper, பிரின்ஸ் குழுமம் போன்ற அமைப்புகள் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து, தங்கள் பணத்தைப் பதுக்க லண்டனில் வீடுகளை வாங்குவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம, Jin Bei குழுமம் மற்றும் Golden Fortune Resorts உட்பட சென் ஷியுடன் இணைந்த நான்கு வர்த்தக நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications