வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்போது கடும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா அதிபராக குடியரசு கட்சியை சார்ந்த டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். அவர் பதவியேற்ற உடனே அமெரிக்க குடியேற்ற கொள்கையில் பெரிய மாற்றங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விசா நடைமுறையில் மாற்றம், முறைகேடாக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவது, கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் , குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் அமெரிக்காவில் இருக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களும் வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களும் தற்போது பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால் பல்வேறு பல்கலைக்கழகங்களும் அவர்களின் வெளிநாட்டு மாணவர்களை அவர்கள் சம்பந்தப்பட்ட கேம்பஸ்களுக்கு திரும்பி விடுமாறு அறிவுறுத்தியுள்ளனவாம். கொலரோடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கோலி ஈஸ்ட் பிபிசி தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அமெரிக்காவில் தற்போது பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெறும் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்காக அமெரிக்க ராணுவத்தின் உதவியையும் பெறப்போகிறேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் வெளிநாட்டு மாணவர்கள் தற்போது பெரும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர்.
ஏனெனில் அந்நாட்டு அரசின் உயர்கல்விக்கான குடியேற்ற தளம் வெளியிடும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் உயர் படிப்பில் இருக்கும் மாணவர்களில் சுமார் 4 லட்சம் பேர் எந்த ஆவணமும் இல்லாமல் அமெரிக்காவில் வந்து தங்கி இருந்து படிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் அனைவருமே தற்போது பிரச்சினையில் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது. பலரும் தங்களுடைய படிப்பை தொடர முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டதாக கூறுகின்றனர். மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டில் இருக்கக்கூடிய தங்களுடைய மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் நாட்டிற்கு திரும்பி விடுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்களாம்.
ஏனெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற போது குறிப்பிட்ட நாடுகளில் இருப்பவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து இருந்தார். எனவே மீண்டும் அப்படி ஒரு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் வெளிநாட்டில் இருக்கும் மாணவர்களும் உடனடியாக நாடு திரும்பும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications