கூகுளின் இணைய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், AI தேடல் ஸ்டார்ட்அப்பான Perplexity-யின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், மீண்டும் தங்கள் நிறுவனத்தின் புதிய 'Comet' AI பிரவுசரை பிரபலப்படுத்தி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளர். அதில், இணையம் என்பது ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தமானதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட கூகுளின் குரோம் பிரவுசரை வாங்குவதற்காக, Perplexity நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 34.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 2.8 லட்சம் கோடி) கொடுத்து வாங்க முன்வந்தது. வெறும் 3 ஆண்டுகளே ஆன இந்த ஸ்டார்ட் அப்பின் சந்தை மதிப்பு 18 பில்லியன் டாலர் என்றபோதிலும், Perplexity இந்த சவாலான சலுகையை கூகுளுக்கு அனுப்பியது.

AI அடிப்படையிலான தேடல் போட்டியில் Chrome போன்ற ஒரு பிரம்மாண்டமான தளத்தை கைப்பற்றுவது Perplexity-க்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அந்நிறுவனம் கருதியது. அந்த சமயத்தில், அமெரிக்க நீதித்துறை இணைய தேடலில் கூகுள் சட்டவிரோத உரிமையைப் பயன்படுத்துவதாகக் கூறி, குரோம் பிரவுசரை விற்கும்படி கூகுளை கட்டாயப்படுத்த முயன்றது.
இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட Perplexity, இந்தச் சலுகையை முன்வைத்தது. தங்கள் சலுகை குறித்துப் பேசிய Perplexity நிறுவனம், குரோமின் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்காக 2 ஆண்டுகளில் கூடுதலாக 3 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும், குரோமின் அடிப்படைத் தேடல் அமைப்புகளை மாற்ற மாட்டோம் என்றும் உறுதியளித்தது.
ஆனால், கூகுள் நிறுவனம் இந்த சலுகையை நிராகரித்த நிலையில், கடந்த மாதம் Perplexity தனது சொந்த ஏஐ-யால் இயக்கப்படும் பிரவுசரான 'Comet'-ஐ அறிமுகப்படுத்தியது. இது கூகுள் குரோமுக்கு இணையான ஒரு அனுபவத்தை வழங்கும் என்று Perplexity நிறுவனம் தெரிவித்துள்ளது.
'Comet' பிரவுசர், குரோம் நீட்டிப்புகள் மற்றும் புக்மார்க்குகளை ஆதரிப்பதுடன் உற்பத்தித்திறன், ஆராய்ச்சி மற்றும் பணி மேலாண்மைக்கான ஏஐ அடிப்படையிலான கருவிகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள AI பக்க உதவியாளர் ஒரு நொடியில் கட்டுரைகளை சுருக்கலாம், மின்னஞ்சல்களை உருவாக்கலாம், அட்டவணைகளை நிர்வகிக்கலாம் மற்றும் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.
தற்போது, Comet பிரவுசர் இந்தியாவில் உள்ள Perplexity Pro பயனர்களுக்கு Windows மற்றும் macOS தளங்களில் கிடைக்கிறது. அதன் ஆண்ட்ராய்டு முன்பதிவுகள் தொடங்கிவிட்டன. iOS ஆதரவுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பயனர்களை ஊக்குவிக்கும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து Perplexity, ஒரு வருட இலவச Pro சந்தாவையும் வழங்குகிறது. இதன் மூலம் கூகுளுக்கு எதிரான அதன் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications