சென்னை: மூத்த குடிமக்களுக்கான முதலீட்டு திட்டங்கள் என வரும் போது ரிஸ்க் குறைவான திட்டங்களை தான் அவர்கள் நாடுவார்கள், அப்படி நமது அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு சிறந்த முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இவை பாதுகாப்பானவை மட்டுமல்ல வங்கிகளை விட கூடுதல் வட்டி தரக்கூடியவை. அப்படி மூத்த குடிமக்களுக்கான ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்
மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் (Post Office Senior Citizen Savings Scheme) நீங்கள் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டில் அது 10 ஆயிரத்து 820 ரூபாயாக வளர்கிறது. அரசு வழங்கக்கூடிய திட்டம் என்பதால் பாதுகாப்பானது . உத்தரவாதமான வருமானம் தரக்கூடியது என்பதால் மூத்த குடிமக்கள் அச்சம் ஏதுமின்றி இதில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் 8.2 % வட்டி வழங்கப்படுகிறது. அதாவது உங்களின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும். உதாரணத்திற்கு நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் ஒரு காலாண்டுக்கு 205 ரூபாய் வீதம் நான்கு காலாண்டுக்கும் சேர்த்து 820 ரூபாய் வட்டி கிடைக்கிறது. வட்டியானது ஆண்டுதோறும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி மாதங்களில் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த முதலீட்டு திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து முதலீடு செய்யலாம். 55 முதல் 60 வயதுக்குள் இருக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும், 50 முதல் 60 வயதுக்குள் இருக்கும் பாதுகாப்பு துறை ஊழியர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
1 லட்சம் ரூபாய்க்கு கீழ் டெபாசிட் செய்யும் போது ரொக்கமாகவும் , 1 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும் போது காசோலையாகவும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். 5 ஆண்டுகள் முடிந்த பின்பு முதலீட்டை பெற்றுக் கொள்ளலாம் அல்லது மேலும் 3 ஆண்டுகளுக்கு கூட நீட்டித்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை கோர முடியும்.
அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திற்கு சென்று திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாள சான்றுகள், முகவரி சான்றுக்கான ஆவணங்கள் மற்றும் வயது சான்றுக்கான ஆவணங்கள் இதற்கு தேவைப்படும்.
இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஓராண்டுக்கு 41,000 ரூபாய் வட்டி கிடைக்கிறது. 5 ஆண்டுகளுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும்.
News Published By : Devika


Click it and Unblock the Notifications