இந்தியாவில் தற்போது பெரும்பாலானவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து மக்களிடையே பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது அண்மையில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு 8.6 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஜூலை மாதத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் வந்த தொகை அளவு 37,13.39 கோடி ரூபாய் ஆகும். குறிப்பாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் தொடர்ந்து 41 வது மாதமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் கணிசமான தொகை வந்த வண்ணம் இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 64,96,653 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதிகளை மேலாண்மை செய்துள்ளன. முதன்முறையாக கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களால் மேலாண்மை செய்யப்படும் சொத்துக்களின் மதிப்பு 60 லட்சம் கோடியை தாண்டியது. ஜூலை மாதத்திலும் அது தக்கவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 15 புதிய மியூச்சுவல் ஃபண்ட் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலம் 16,565 கோடி நிதி திரட்டப்பட்டது. குறிப்பாக செக்டோரியல் மற்றும் தீமேட்டிக் ஃபண்டுகள் தான் 9,790 கோடி ரூபாய் நிதியுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதேவேளையில் எஸ்ஐபி முறையில் செய்யப்படும் முதலீடுகளின் அளவு ஜூன் மாதத்தில் 21,262 கோடி ரூபாயாக இருந்து ஜூலை மாதத்தில் 23,332 கோடி என உயர்ந்துள்ளது.
ஆனால் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகள் 31% குறைந்துள்ளது. அதேபோல ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளின் அளவும் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் புதிதாக 2,109 கோடி ரூபாய் முதலீடு மிட் கேப் ஃபண்டுகளில் புதிதாக 1,644 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஹைபிரிட் ஃபண்டுகளில் அதிகபட்ச முதலீடு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது ஜூன் மாதத்தில் ஹைபிரிட் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் 8,850 கோடி ரூபாயாக இருந்து, ஜூலை மாதத்தில் அது 17,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஹைபிரிட் ஃபண்டுகள் என்பது ஈக்விட்டி மற்றும் டெப்த் ஃபண்டுகளில் கலவையாக முதலீடு செய்யும் ஃபண்டுகள் ஆகும்.எனவே முதலீட்டாளர்கள் தற்போது ஈக்விட்டி மட்டுமல்லாது பிற நிதிகளிலும் முதலீடுகளை பரவலாக்க முனைவது இதன் மூலம் தெரிய வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications