ஆப்பிள் நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களுடைய ஸ்மார்ட் ஃபோன்களை அப்கிரேட் செய்து அடுத்தடுத்த சீரிஸ் போன்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இத்தனை காலமாக ஆப்பிள் வெளியிட்ட ஐபோன்களுடன் ஒப்பிடும்போது ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல் போன்கள் சாப்ட்வேர் அளவில் இல்லாமல் ஹார்டுவேர் ரீதியாக பல்வேறு மாற்றங்களை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுவாக ஐபோன் என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஐபோன் பயன்படுத்தும் போது கிடைக்கக்கூடிய ப்ரீமியமான அனுபவம் வேறு எந்த பிராண்ட் போன்களிலும் கிடைப்பதில்லை என ஐபோன் பயனாளர்கள் கூறுவது உண்டு.

எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய அடுத்தடுத்த மாடல் ஐபோன்களை அறிமுகம் செய்யும்போதெல்லாம் கடைகளில் முந்தைய நாளில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் அவற்றை வாங்குவதை காண முடிகிறது. இந்தியாவிலேயே கூட ஆப்பிள் நிறுவனம் நேரடியாக தன்னுடைய ஐபோன் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐபோன் 18 சீரிஸ் போன்களில் பேட்டரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இந்த முறை ஆப்பிள் நிறுவனம் ஹார்ட்வேர் மேம்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறதாம். நீண்ட நேரம் பேட்டரி நீடிப்பதில்லை என்பது தான் ஐபோன் பயனர்கள் பலரும் கூறக்கூடிய புகார். ஐபோன் 18 சீரிஸ் போன்களில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனெனில் இந்த முறை 5100 லிருந்து 5200 எமஏஹெச் பேட்டரிகள் பொருத்தப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் புதிதாக ஏ20 சிப்செட்டுகள் மற்றும் நவீன பிராசர்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவே எவ்வளவு அதிகமான டாஸ்குகளை மேற்கொண்டாலும் அதிக அளவு பேட்டரியை இது பயன்படுத்தாது என சொல்லப்படுகிறது.
ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல் போன்களில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் வரை செயல்படும் திறன் கொண்டதாக வடிவமைத்துள்ளார்களாம். அதேவேளையில் கேமராவை பொறுத்தவரை பின்பக்கத்தில் 3 கேமராக்களும் முன்பக்கத்தில் ஒரு கேமராவும் இருக்கும். குறிப்பாக ஃபோல்டபிள் அதாவது மடக்கும் வகையில் புரோ மேக்ஸ் போன்கள் வடிவமைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நவீன ஏஐ வசதிகளோடு இந்த போன்கள் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
இந்தியாவிலேயே ஐபோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஐபோன் 18 மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டில் விற்பனைக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 18 மாடல் புரோவின் விலை 1.40 லட்சத்தில் இருந்து விற்கப்படலாம் என எதிர்பார்ப்படுகிறது.


Click it and Unblock the Notifications