சென்னை: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரித்து வழங்கக்கூடிய முன்னணி நிறுவனமாக ஃபாக்ஸ்கான் செயல்பட்டு வருகிறது. சென்னை அடுத்த ஒரகடத்தில் இதன் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. அண்மையில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யுஸான் டெக்னாலஜி சென்னை ஒரகடத்தில் 5.50 லட்சம் சதுர அடி பரப்பில் மிகப்பெரிய கிடங்கினை குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை பூர்த்தி செய்ய ஏதுவாகவும்ஃ தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் , தனது துணை நிறுவனம் மூலம் கிடங்கினை குத்தகைக்கு எடுத்துள்ளது. ஃபாக்ஸ்கானை பொறுத்தவரை இந்த கிடங்கு தான் தற்போது அதனிடம் உள்ள மிகப்பெரிய கிடங்காகும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதியை வலுப்படுத்த ஆப்பிள் நிறுவனம் விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையில் ஃபாக்ஸ்கானும் விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த புதிய கிடங்கு வசதி நிறுவனத்தின் ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்யக்கூடிய மூன்று பெரிய ஒப்பந்த நிறுவனங்களில் ஃபாக்ஸ்கானும் ஒன்று. இந்த குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் யுஸான் டெக்னாலஜி நிறுவனம் அடுத்த 10 ஆண்டு காலத்திற்கு ஒரு சதுர அடிக்கு 26 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை மாதாந்திர குத்தகையாக வழங்க இருக்கிறது.
10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலத்திற்கு இந்த தொழிலில் ஈடுபட விரும்புவதை காட்டுகிறது. மேலும் இந்திய சந்தையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஃபாக்ஸ்கானின் ஆர்வம் மற்றும் முன்னனி ஐபோன் உற்பத்தி ஆலையாக மாற வேண்டும் என்ற இலக்கு ஆகியவற்றை குறிக்கிறது.
சென்னை ஒரகடத்தில் அமைந்திருக்க கூடிய ஈஎஸ்ஆர் இண்டஸ்ட்ரியல் பூங்கா 100 ஏக்கர் பரப்பளவில் 2.2மில்லியன் சதுர அடிக்கு வாடகைக்கு விடும் அளவிற்கு இடத்தை கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த தொழில் பூங்காவில் கியூபிக், சீமன்ஸ் மற்றும் நியூ செஞ்சுரி சோபா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த புதிய கிடங்கு வசதி மூலம் ஒரகடம் பகுதியில் வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. இந்தியாவில் மின்னணு சாதனங்களுக்கான வளர்ந்து வரும் தேவைகளை பயன்படுத்தி வலுவான கட்டமைப்பை நிறுவ ஃபாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications