இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன்களை தயாரித்து வழங்கி வரக்கூடிய ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே தன்னுடைய செல்போன் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. இந்த ஆலையில் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான ஐபோன்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போதைக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஐபோன் உற்பத்தி ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் இருந்து தொழில் நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களை வரவழைத்தும் செல்போன் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களையும் இந்தியா கொண்டு வந்தும் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் வேலை செய்து வருகிறது.

ஆனால் அண்மை காலமாக சீன ஊழியர்கள் இந்திய ஐபோன் ஆலைகளுக்கு வருவதில்லையாம். சீனாவில் இருந்து வர வேண்டிய முக்கியமான உபகரணங்கள் இன்னும் இந்தியாவிற்கு வந்து சேரவில்லை என தெரியவந்துள்ளது.எனவே ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீன ஊழியர்களுக்கு பதிலாக தைவான் நாட்டை சேர்ந்த ஊழியர்களை இந்தியாவில் இருக்கும் ஆலைகளுக்கு பணிக்கு அனுப்பி வருகிறதாம்.
இந்தியாவில் தற்போதைக்கு ஐபோன் உற்பத்திக்கு தேவையான பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால் சீனாவில் இருந்து தான் அவற்றை கொண்டு வர வேண்டி இருக்கிறது. ஆனால் சீனாவில் இருந்து அவற்றை இந்தியா கொண்டு வருவதில் அண்மைக்காலமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்திருப்பதாக தெரிகிறது. எனவே இது ஐபோன் உற்பத்தியில் சில தாமதங்களை ஏற்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா காலத்தில் சீனா ஜீரோ கோவிட் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதனால் அங்கே ஐபோன் உற்பத்தி செய்ய முடியாமல் ஆப்பிள் நிறுவனம் தவித்தது. எனவே ஃபாக்ஸ்கான் மூலம் இந்தியாவில் ஆலைகளை நிறுவி ஐபோன்களை உற்பத்தி செய்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவியது.
ஐபோன் உற்பத்திக்கான நிபுணத்துவம் பெற்ற ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுக்கு சீனாவை தான் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவ்வாறு இந்தியாவுக்கு வர வேண்டிய சீன ஊழியர்கள் திடீரென தங்களுடைய பயணத்தை ரத்து செய்து விட்டார்களாம். இந்தியாவிலிருந்த சீன ஊழியர்களும் நாடு திரும்பி விட்டார்களாம். எனவே அவர்களுக்கு மாற்றாக தைவானிலிருந்து ஊழியர்களை கொண்டு வருவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் கூறியுள்ளது. சீன அரசின் தலையீடே இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் உற்பத்திக்கு சீனாவை மட்டுமே சார்ந்திருக்க கூடாது என ஆப்பிள் நிறுவனம் கருதுகிறது. எனவே இந்தியாவில் நவீன ஐபோன் மாடல்களை உற்பத்தி செய்ய கவனம் செலுத்துகிறது. இது சீனாவில் உற்பத்தியை குறைத்ததால் அந்நாட்டு அரசு இப்படி குறுக்கீடுகளை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications