2024 ஐபில் போட்டிக்கான விளையாட்டு வீரர்களின் ஏலம் முதல் நாளில் மட்டும் சுமார் 230.45 கோடி ரூபாய் செலவு செய்து சுமார் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2வது நாள் ஏலம் விறுவிறுப்பாக துவங்க உள்ளது. இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் தற்போது ஐபிஎல் ஏலத்தை கூர்ந்து கவனித்து வரும் வேளையில் டாடா-வுக்கு வேட்டு வைக்க வருகிறது ஒரு ஐடி நிறுவனம்.
பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியின் 2024-2028 சீசன்களுக்கான டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஏல டெண்டரை இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) அறிவித்து, டெண்டர்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குரூப் 2022, 2023 ஆகிய இரண்டு சீசன்களுக்கான டைட்டில் ஸ்பான்ஸராக இருந்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில் டாடா குழும பங்குகள் பெரிய அளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க IPL டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்-ம் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு ட்ரீம் 11 நிறுவனம் 2 சீசன்களுக்கு டைட்டில் ஸ்பான்ஸராக இருந்தது. 2020இல் நீண்ட கால ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ விலகியதை தொடர்ந்து ட்ரீம் 11 நிறுவனம் கைப்பற்றியது.
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் என்பது எந்தவொரு பிராண்டுக்கும் பெரிய விளம்பரத்தைப் பெற்று தரும் என்பதால் அனைத்து முன்னணி பிராண்டுகளும் ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. இந்த நிலையில் ஒரு முன்னணி ஐடி சர்வீஸ் கம்பெனி ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களான நாராயண மூர்த்தியின் இன்போசிஸ், ஷிவ் நாடாரின் ஹெச்சிஎல் அல்லது அசிம் பிரேம்ஜியின் விப்ரோ ஆகியவை இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் NTT Data என்ற முன்னணி ஐடி கம்பெனி ஐபிஎல் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
ஜப்பானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த என்டிடி டேட்டா குரூப் உலகம் முழுவதும் செயல்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் இருந்து என்டிடி டேட்டா நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்ஸர் செய்வது இந்த நிறுவனத்துக்கு ஒன்றும் புதிய விஷயமில்லை.
அமெரிக்காவில் பிரபலமான IndyCar series மற்றும் உலகின் மெகா சைக்கிளிங் போட்டியான Tour De France போன்ற விளையாட்டுகளுக்கு என்டிடி ஸ்பான்ஸர் செய்துள்ளது. இதனால் 2024-08 சீசனுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் பெறுவதற்கு டாடா உடன் என்டிடி டேட்டா போட்டிப்போடும்.


Click it and Unblock the Notifications