ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்கள் தங்களது வணிகத்தை விரிவுப்படுத்தும் வகையில் புதிய துறைகளில் களம் கண்டு வருகின்றன. அந்த வகையில் ஹெல்த்கேர் மற்றும் எரிசக்தி துறைகளில் வர்த்தகம் செய்து வரும் டொரண்ட் குழுமம் தற்போது விளையாட்டு துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.
அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொரண்ட் குழுமத்தின் பார்வை கிரிக்கெட் மீது விழுந்துள்ளது. நம் நாட்டில் பிரபலமாக இருக்கும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை டொரண்ட் குழுமம் வாங்க உள்ளது.

டொரண்ட் குழுமம் தனது ஹோல்டிங் நிறுவனமான டொரண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (டிஐபிஎல்) வாயிலாக. குஜராத் டைட்டன்ஸில் 67 சதவீத பங்குகளை வாங்க அதன் தற்போதைய உரிமையாளரான சிவிசி கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனத்துடன் ஒரு உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
2021ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிவிசி கேபிட்டல் பார்ட்னர்ஸ் நிறுவனம் சுமார் ரூ.5,700 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது. 2022ல் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
டொரண்ட் குழுமம் குஜராத் டைட்டன்ஸின் 67 சதவீத பங்குகளை எவ்வளவு தொகைக்கு வாங்க உள்ளது என்ற தகவல் சரியாக தெரியவில்லை. மேலும், இந்த பரிவர்த்தனை வழக்கமான இறுதி நிபந்தனைகள் மற்றும் பிசிசிஐயின் ஒப்புதல் போன்ற ஒப்புதல்களுக்கு உட்பட்டது.
குஜராத் டைட்டன்ஸின் எஞ்சிய 33 சதவீத பங்குகளை சிவிசி கேபிட்டல் பார்டனர்ஸ் தக்கவைத்து கொள்ளும். டொராண்ட் குழுமத்தின் இயக்குனர் ஜினல் மேத்தா கூறுகையில், இந்தியாவில் விளையாட்டு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருவதால், வேகமாக வளர்ந்து வரும் இந்த துறையில் டொரண்ட் பெரும் ஆற்றலை காண்கிறது.
குஜராத் டைட்டன்ஸின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதன் மூலம், எங்கள் ரசிகர் அனுபவத்தை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் புதிய வளர்ச்சி வழிகளை திறக்கவும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்தார்.
சிவிசி கேபிட்டல் பார்டனர்ஸின் நிர்வாக பங்குதாரரான நிக் கிளாரி கூறுகையில், எங்கள் நிறுவனத்துக்கு விளையாட்டுகளில் முதலீடு செய்வதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸில் எங்கள் முதலீடு எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். குறிப்பாக எங்கள் ரசிகர்கள்,எங்கள் நிர்வாக குழு, எங்கள் வீரர்கள் மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
அவர்களால் மைதானத்திலும் வெளியேயும் ஒரு குஜராத் டைட்டன்ஸ் ஒரு முன்னணி அணியாக மாறியுள்ளது. எங்கள் அற்புதமான ரசிகர்களின் ஆதரவுடன், எங்கள் புதிய கூட்டாளிகளுடன் (டொரண்ட்) இது துரிதப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குஜராத் டைட்டன்ஸின் 67 சதவீத பங்குகள் கைமாறும் நடடிவக்கை விரைவில் முடிவடைந்தால், 2025 ஐபிஎல் சீசன் முதல் குஜராத் டைட்டன்ஸ் புதிய உரிமையாளராக டொரண்ட் குழுமம் இருக்கும்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications