கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ஈரானில் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபுறம் ஈரானை தாக்கிக் கொண்டிருக்க பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டும் பாதிக்கவில்லை சுற்றி இருக்கக்கூடிய மேற்காசிய நாடுகள் அனைத்தையுமே பாதித்திருக்கிறது. அதைத் தாண்டி ஆசிய நாடுகளில் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் லாக்டவுன் போன்ற ஒரு சூழலே அறிவிக்கப்பட்டு விட்டது. ஈரான் போர் நீடிக்கும் பட்சத்தில் அடுத்ததாக பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற அச்சம் நீடிக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் எனர்ஜி லாக்டவுன் போன்ற சூழல்கள் கூட வரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான இந்தியர்கள் கலக்கமடைந்தனர். ஒரு லாக்டவுனில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்த லாக்டவுனா என மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். ஆனால் இனி அந்த அச்சம் இல்லை. ஏனேனில் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஈரான் ஒரு நல்ல செய்தியை அறிவித்திருக்கிறது.
ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தங்களின் நட்பு நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்களை கொண்டு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அராக்சி, ஈரானின் தங்களின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா , இந்தியா , ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த அனுமதி தந்திருக்கிறோம் என அறிவித்திருப்பதாக கூறி இருக்கிறது.

எனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனா , ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாட்டு கொடி ஏந்திய கப்பல்கள் பாதுகாப்பாக இனி கடந்து வர முடியும். அந்த வகையில் இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது மறுபுறம் கச்சா எண்ணெய் வரத்து நின்று போயிருக்கிறது. இத்தகைய சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு பிரச்சனைக்கு ஒரு பெரிய தீர்வாக அமையும்.
முன்னதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனி கட்டேரஸ், ஈரான் போர் நீண்ட காலம் நீடிப்பது உலக அளவில் பெரிய அளவிலான எண்ணை, எரிவாயு மற்றும் உணவு பிரச்சனைகளுக்கு வித்திடும் எனக் கூறி இருந்தார். கோடிக்கணக்கான மக்கள் இதனால் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுதான் இந்த பிரச்சனைக்கு இருக்கும் ஒரே வழி எனக் கூறியிருந்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். மேலும் ஈரான் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த சூழலில் தான் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் நட்பு நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா ஈரானிடம் இருந்து எல்பிஜி கொள்முதல் செய்திருக்கிறதாம். அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா ஈரானிடம் இருந்து எல்பிஜி உள்ளிட்டவற்றை வாங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா அந்த பொருளாதார தடைகளுக்கு தளர்வு அறிவித்திருப்பதால் இந்தியா கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடம் இருந்து எல்பிஜி கொள்முதல் செய்திருக்கிறது. அரோரா என்ற எல்பிஜி கப்பல் இந்தியாவின் மங்களூர் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
இந்த எல்பிஜி கார்கோ இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் , பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போர் தொடங்கியது முதல் தற்போது வரை அதாவது 1 மாத காலத்தில் நான்கு எல்பிஜி கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்த அடைந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications