அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி திடீரென ஈரான் மீது ராணுவ தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடைய மரணம் ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஈரான் நாட்டு ராணுவம் மிக தீவிரமாக தாக்குதலை நடத்த தொடங்கியது.
குறிப்பாக உலகின் மிக முக்கியமான சரக்கு போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. தங்களின் அனுமதி இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த ஒரு கப்பலும் கடக்க முடியாது அவ்வாறு கடந்து செல்ல முயன்றால் அந்த கப்பல்களை வீழ்த்துவோம் என அறிவிப்பு வெளியிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்கள் வளைகுடா நாடுகளிலேயே தேக்கமடைந்து விட்டன. மேற்கு ஆசிய நாடுகளின் எண்ணெய் மற்றும் எல்பிஜி உற்பத்தி ,விநியோகம் ஆகிய அனைத்துமே பெருமளவில் தடைப்பட்டுள்ளன.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என ஈரானுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிப்பதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆனால் அதற்கு சில கண்டிஷன்களை போட்டு இருக்கிறது. ஐநா பொது சபை மற்றும் சர்வதேச கடல் வழி போக்குவரத்து அமைப்புக்கு அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டு இருக்கிறது.
ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐநா பொதுச் செயலாளர் , சர்வதேச கடல் போக்குவரத்து அமைப்பிற்கு அனுப்பியுள்ள அறிக்கையை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களை அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு எதிரான செயல்களில் பங்கேற்காமல் அவற்றை ஆதரிக்காமல் இருக்க கூடிய நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி தர தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளது.
ஈரானுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடிய நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி தர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து செல்லக்கூடிய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியின் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறது.
இந்த தகுதிகளை பூர்த்தி செய்யக்கூடிய நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் ஈரான் நாட்டு அரசோடு ஒருங்கிணைந்து முன் கூட்டியே அறிவித்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தங்களுடைய கப்பல்களை பாதுகாப்பாக இயக்கலாம் என அறிவித்துள்ளது. ஈரானின் எதிரி நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை தவறாக பயன்படுத்துவதாகவும் தங்களுக்கு எதிரான தாக்குதலுக்காக அந்த பாதையை பயன்படுத்துவதை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சொந்தமான மற்றும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவு தரக்கூடிய நாடுகளின் கப்பல்களுக்கு இந்த வழித்தடத்தில் அனுமதி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது ஈரான். இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல செய்தியாகும் ஏற்கனவே இந்தியாவில் எல்பிஜி கட்டுப்பாடு நிலவி வரக்கூடிய சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எல்பிஜி, கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும் போது இங்கே எரிபொருள் தட்டுப்பாடு தீரும். இதற்கிடையே மத்திய அரசும் இந்திய கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications