ஈரான் போர் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி , கச்சா எண்ணெய் மற்றும் உரம் உள்ளிட்டவை இந்தியாவிற்கு வந்து சேரவில்லை. ஏனென்றால் வளைகுடா நாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வருவதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி ஹார்முஸ் ஜலசந்தி தான். இதனை ஈரான் மூடிவிட்டது, தங்களுடைய அனுமதி இல்லாமல் எந்த ஒரு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாது. அவ்வாறு கடக்க முயன்றால் அந்த கப்பல்களை அழிப்போம் என எச்சரிக்கை விடுத்தது.
பாதுகாப்பு கருதி எந்த நிறுவனங்களும் தங்களுடைய கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயக்கவில்லை. இந்தியா போன்ற நாடுகள் ஈரானின் அனுமதி பெற்று குறிப்பிட்ட சில கப்பல்களை மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக அழைத்து வந்தன. இதற்கிடையே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை ,பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் எரிபொருள் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பதில் பெரிய சிக்கல் உண்டாகி இருக்கிறதாம். அதாவது போர் சமயத்தில் ஈரான் நாட்டு புரட்சிகர பாதுகாப்பு படை கண்ணி வெடிகளை கடலில் வைத்ததாம். தற்போது அந்த கண்ணிவெடிகள் எங்கே வைத்தது என்ற டிராக்கை இழந்து விட்டதால் அவற்றை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் தான் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் வெளிப்படையாக இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவையும் வெளியிடாமல் இருக்கிறது என நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஒருபுறம் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும், எண்ணெய் போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என கூறி வருகின்றன. ஆனால் கப்பல்கள் இந்த வழியே பயணிக்கும் போது கண்ணி வெடிகளிடம் சிக்கிக் கொண்டால் கப்பல்கள் அனைத்துமே வெடித்து சிதற நேரிடும். இது பெரிய சிக்கலை உண்டாக்கும்.
போர் தொடங்கப்பட்ட மார்ச் மாத முதல் வாரத்திலேயே ஈரான் சிறு சிறு படகுகளில் சென்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளிலும் கண்ணி வெடிகளை வைத்து விட்டு வந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் எந்தெந்த இடத்தில் இந்த கண்ணிவெடிகளை வைத்தோம் என்பது குறித்து பதிவு செய்து வைக்காததால் தற்போது அவற்றை திரும்ப எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் ஜலசந்தி திறந்தாலும் அந்த வழியை கப்பல்களை இயக்குவது சிக்கலை உண்டாக்கும் என தெரிவிக்கிறது.
இதற்கிடையே ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை ஒரு பாதுகாப்பான பகுதி என ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த வழியில் கப்பல்கள் வரலாம் என தெரிவித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சனை பெரிய பூதாகரமாக வெடிக்கும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications