அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கக்கூடிய ஈரான் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேல் மீதும் கடுமையான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த போர் காரணமாக உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜல சந்தியை மூடி இருக்கிறது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி வாயிலாக தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தேவையான கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு தேவையான 60%க்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்த வழியாக தான் வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு விட்டது.

இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த கப்பல் நுழைந்தாலும், இந்த வழித்தடத்தை கடந்து செல்ல முயன்றாலும் அந்த கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்துவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது ஈரான் பாதுகாப்பு படை. ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹார்முஸ் ஜல சந்தியை மூடிவிட்டோம் இந்த பகுதியை கடக்க எந்த கப்பல் நினைத்தாலும் அதன் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உலகில் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. சவுதி அரேபியா , ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தான் உலகிற்கே தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் உலக நாடுகளுக்கு செல்ல முடியும்.

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்வதற்கான மிக முக்கியமான வழித்தடம் இது. இந்த வழித்தடம் மூடப்பட்டிருப்பதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது. இந்த சூழலில் தான் இந்த வழியில் எந்த கப்பல் நுழைந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம் அதனை வீழ்த்துவோம் என ஈரான் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரிக்க போகிறது. இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்.
ஈரான் போரால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை ஆய்வு செய்து வரும் மத்திய அரசு தற்போதைக்கு நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகம் தடைபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறதாம், மீண்டும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications