அமெரிக்க அதிபர் டிரம்ப், இடைக்கால தேர்தல் தோல்வியில் இருந்தாலும் ஈரான் போர் குறித்த நடவடிக்கைகளில் தீவிரமாக தான் இருக்கிறார். இதனால் அமெரிக்கா எந்த நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் இப்போது இன்னும் அதிகமாகியுள்ளது.
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது மீண்டும் தீவிர ராணுவ தாக்குதல்களை தொடுக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக அணு உலைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு கதிர்வீச்சு தாக்கத்திலிருந்து பாதுகாப்பு தரும் அயோடின் மாத்திரைகளை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது.

டிரம்ப் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஈரான் நாட்டின் மீதமுள்ள பகுதிகளை நான் அழிக்க விரும்பவில்லை, ஆனால் ஒருவேளை நான் அப்படி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்; அதற்கான விளைவுகளை விரைவில் அறிந்துகொள்வீர்கள் என கூறி இருந்தார். டிரம்பின் இந்த பேட்டியும் அவரது ஆலோசகர்கள் டிரம்ப் அணு ஆயுத தாக்குதல் நடத்த இஸ்ரேலுடன் ஆலோசிப்பதாக வெளியிட்ட தகவலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பீதியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ஈரானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள செயல்பாட்டில் உள்ள புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அயோடின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அணு உலைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் பகுதிகளிலும் பின்னர் புஷெர் நகர் முழுவதும் அயோடின் மாத்திரை விநியோக திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து மக்களை காக்கும் தன்மை கொண்ட இந்த மாத்திரைக்ள் அனைத்து சுகாதார மையங்களிலும் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஈரான் அரசு கூறுகிறது.
அணு விபத்து அல்லது கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் பட்சத்தில், மனித உடலில் உள்ள தைராய்டு சுரப்பி கதிர்வீச்சு அயோடினை உறிஞ்சி கொள்வதை இந்த மாத்திரைகள் தடுத்து பாதுகாக்கின்றன. கதிர்வீச்சுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு இருந்து, தாக்குதல் நடந்து 4 மணி நேரத்திற்குள் இந்த மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
டிரம்ப்பை இனிமேலும் நம்ப முடியாது; அவர் எப்போதும் எந்த தாக்குதலையும் தொடுப்பார் என ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக கடுமையான ராணுவ மோதல்கள் நிலவும் காலங்களில், அணுசக்தி நிலையங்களை சுற்றி 2 முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே இதுபோன்ற தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது வழக்கம், ஆனால் நகரம் முழுவதுமே மாத்திரை விநியோகம் செய்யப்படுவது அமெரிக்க தாக்குதல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.
முன்னதாக வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்புக்குழு அதிகாரிகளுடன் அதிபர் டிரம்ப் முக்கிய கூட்டங்களை நடத்தி ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக விவாதித்துள்ளார். இதனால் ஈரானின் Pickaxe Mountain பகுதியில் உள்ள அணுசக்தி தளத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்காவின் இந்த ராணுவ நகர்வுகள் மற்றும் ஈரானின் இந்த அவசரகால நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications

