ஈரான் போர் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தி தான். பெரும்பாலான உலக நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய் ,எல்பிஜி , உரம் உள்ளிட்டவை வளைகுடா நாடுகளில் இருந்து தான் வாங்கப்படுகிறது. அப்படி வளைகுடா நாடுகளில் கொள்முதல் செய்யப்படக்கூடிய கச்சா எண்ணெய், எல்பிஜி, ஆகியவற்றை கப்பல் வழியாக வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி ஹார்முஸ் ஜலசந்தி தான்.
இந்த ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால் தான் ஈரான் போர் அந்த ஒரு நாட்டை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளையே பாதிப்படைய செய்திருக்கிறது. ஏனென்றால் ஈரான் போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த மூன்று வார காலமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. என்னதான் அமெரிக்காவும், இஸ்ரேலும் மாறி மாறி ஈரான் மீது தாக்குதல் நடத்தினாலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இந்த இரண்டு நாடுகளால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்க முடியவில்லை.

தங்களின் அனுமதியில்லாமல் எந்த ஒரு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைந்தாலும் அவற்றை அழிப்போம் என ஈரான் சூளுரைத்துள்ளது. இதனால் எந்த நிறுவனங்களும் ஹார்மோன் ஜல சந்தி வழியாக தங்களுடைய சரக்கு கப்பல்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றன. எனவே இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல இலங்கை , பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏராளமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் தான் ஈரான் அரசாங்கம் ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து ஒரு பெரிய திட்டம் போடுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி பயன்படுத்தக்கூடிய கப்பல்களுக்கு சுங்க கட்டணம் அல்லது வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம்.

போரால் ஏற்கனவே பல்வேறு நிதி இழப்புகளை சந்தித்திருக்கக்கூடிய ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தி வருமானம் பார்க்க முடிவு செய்திருக்கிறதாம். அந்த வகையில் ஹார்மோன் ஜலசந்தி வழியாக கடந்து செல்ல வேண்டும் என்றால் அந்த கப்பல் நிறுவனங்கள் ஈரான் அரசுக்கு சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும் என சட்டம் கொண்டு வர இருக்கிறதாம்.
ஈரான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு மசோதா கொண்டுவரப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஈரான் நாட்டின் ஸ்டூடண்ட்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குகளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாடுகள் இனி அதற்கு ஒரு சுங்க கட்டணம் அல்லது வரி போன்றவற்றை ஈரானுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
இது இந்தியா போன்ற நாடுகளுக்கு இன்னும் செலவு ஏற்படுத்தக் கூடியதாக அமையும். ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது, போர் எப்போது முடியும் என்றே தெரியவில்லை, எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என அடுத்தடுத்த பிரச்சினை இருக்கும் போது உள்நாட்டிலும் எல்பிஜி, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதற்கிடையே ஈரான் புதிய கட்டணத்தை அறிவித்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இறக்குமதி செலவு அதிகரித்து அந்த நிதி சுமையை விலை உயர்வின் மூலம் மக்களாகிய நம் மீது தான் சுமத்துவார்கள்.


Click it and Unblock the Notifications