ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக பெரும் பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் முதல் தாக்குதல் அலையாக விரிவான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஆக்கிரமிப்பு பகுதிகளை நோக்கி தொடங்கியுள்ளன என்று அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியை மீண்டும் போர் நிலைக்கு தள்ளியுள்ளது.
இதேவேளையில் ஈரானில் புதிய குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெஹ்ரானில் "இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட" குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. IRNA செய்தி நிறுவனம் இலாம் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குண்டு வெடிப்புகள் நடந்தாக கூறியுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களாக பார்க்கப்படுகிறது. ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் வான்வெளியை மூடப்பட்டு உள்ளதால் இந்த நாடுகள் மேல் விமானங்கள் பறக்காமல் உள்ளது.

மேலும் இணைய கண்காணிப்பு நிறுவனமான நெட்ப்ளாக்ஸ், ஈரானில் மொத்த இண்டர்நெட் இணைப்பும துண்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் இண்டர்நெட் இணைப்பு வெறும் 4 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளது Netblocks. "இது கடந்த ஆண்டு இஸ்ரேலுடனான போரின்போது பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை போலவே உள்ளது" என்று நெட்ப்ளாக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் உடன் அமெரிக்கா அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் தற்போது ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் திடீர் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவின் உதவியுடன் ஈரானுக்கு எதிராக சனிக்கிழமை முன்கூட்டிய தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் தாக்குதல் நடத்துமோ என்ற சந்தேகத்தில் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேல் திடீர் தாக்குதலை துவங்கி தற்போது ஈரானும் பதில் தாக்குதல் நடத்த துவங்கி முழு போராக மாறியுள்ளது. இந்த தாக்குதல் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் போர் அச்சம் அதிகரித்துள்ளது.
ஈரான் - மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நடந்து வரும் அணு ஆயுத பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் நம்பிக்கை இந்த தாக்குதல் மூலம் குறைந்துள்ளது. முதல் தாக்குதல் ஈரான் தலைவர் அயதொல்லா அலி கமேனியின் அலுவலகங்கள் அருகே நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் ஊடகங்கள் நாடு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாக கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வீடியோ செய்தியில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். "சற்று நேரத்துக்கு முன்பு அமெரிக்கா ஈரானில் பெரிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. எங்கள் குறிக்கோள் அமெரிக்க மக்களை பாதுகாப்பதற்காக ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை அழிப்பது" என்று அவர் கூறியுள்ளார். தற்போது அமெரிக்க படைகள் வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு சர்வதேச முதலீட்டு சந்தை பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், தங்கம், வெள்ளி மீண்டும் உச்சத்தை எட்டும்.


Click it and Unblock the Notifications