ஈரான்-இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக இருந்த நிழல் போர் (Shadow War) வரலாறு காணாத மோதலாக உருவெடுத்துள்ள நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணை, இஸ்ரேலின் உலகப் புகழ்பெற்ற வெய்ஸ்மேன் கல்லூரியை (Weizmann Institute of Science) தாக்கி, பல ஆய்வகங்களை அழித்து, பல ஆண்டு ஆராய்ச்சிகளை நாசமாக்கியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையில் ஈரான் கடந்த ஒரு வாரமாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் இஸ்ரேல் நாட்டின் பங்குச்சந்தை கட்டடம், மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நாட்டின் அறிவு களஞ்சியமாக விளங்கிய கல்லூரி மீது நடந்த தாக்குதல் குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில், இஸ்ரேலின் அறிவியல் ஆராய்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஈரான் அவர்களின் நிபுணத்துவத்தை அடித்து ஒடுக்கும் முயற்சியாக இந்த தாக்குதலை செய்துள்ளது. இந்தச் சம்பவம், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலில் அறிவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர் முக்கிய இலக்காக மாறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. இதேபோன்ற வேலையை தான் இஸ்ரேல், ஈரான் நாட்டு அணுசக்தி வல்லுனர்களை டார்கெட் செய்து தாக்கியது.
வெய்ஸ்மேன் கல்லூரியில் ஈரான் தாக்குதல்:
கடந்த ஜூன் 15, 2025 அன்று அதிகாலையில், இஸ்ரேலின் ரெஹோவோத் நகரில் அமைந்துள்ள அரசு ஆராய்ச்சி கல்லூரியான வெய்ஸ்மேன் கல்லூரியின் (Weizmann Institute of Science) மீது ஈரான் ஏவிய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், உயிரியல் அறிவியல் (Life Sciences) மற்றும் வேதியியல் (Chemistry) ஆய்வகங்கள் உள்ளடங்கிய இரு கட்டடங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகின.
இது மட்டும் அல்லாமல் 6க்கும் அதிகமான பிற கல்லூரி கட்டடங்களும் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் மூலம் இக்கல்லூரியில் செய்து வந்த பல ஆண்டு ஆராய்ச்சிகளையும், மதிப்புமிக்க ஆய்வு மாதிரிகளையும் (Research Samples) அழித்து, இஸ்ரேல் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிழல் போர் என்றால் என்ன?
நிழல் போர் என்பது, இரு நாடுகளுக்கு இடையே நேரடி இராணுவ மோதல் இன்றி, ரகசியமாக நடத்தப்படும் தாக்குதல் ஆகும். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த நிழல் போரில், இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை (Nuclear Program) தடுக்கும் நோக்கில், ஈரானிய அறிவியல் ஆராய்ச்சியாளர்களை இலக்கு வைத்து, ரகசிய தாக்குதல்களை மேற்கொண்டு வந்தது.
உதாரணமாக, இஸ்ரேல், ஈரானிய அணு ஆராய்ச்சியாளர்களை படுகொலை செய்து, அந்நாட்டின் அணு ஆயுத முன்னேற்றத்தை தடுக்க முயன்றது. இதற்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேலின் முக்கிய அரசு ஆராய்ச்சி அறிவியல் கல்லூரியான வெய்ஸ்மேன்-ஐ இலக்காகக் கொண்டு இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக கருதப்படுகிறது. இந்த தாக்குதல், இஸ்ரேலின் நிழல் போரின் தாக்குதலுக்கு பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
வெய்ஸ்மேன் எவ்வளவு முக்கியம்:
1934-ல் நிறுவப்பட்ட வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம், இஸ்ரேலின் முதல் குடியரசுத் தலைவர் சைம் வெய்ஸ்மேனின் (Chaim Weizmann) நினைவாக பெயரிடப்பட்டது. இது உலகின் மிகச் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், உயிரியல், இயற்பியல், மற்றும் வேதியியல் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இதன் சாதனைகளில் முக்கியமாக இக்கல்லூரியில் இருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிக்கு ஒரு நோபல் பரிசு (வேதியியல்) மற்றும் மூன்று ட்யூரிங் விருதுகள் (Turing Awards) பெறப்பட்டு உள்ளது. மேலும், 1954-ல் இஸ்ரேலின் முதல் கணினியை இந்நிறுவனம் உருவாக்கியது.


Click it and Unblock the Notifications