மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியிருக்கும் ஈரான் போர் பதற்றம், இந்திய பொருளாதாரத்திற்கு மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த பாதிப்பு நாட்டின் கடைக்கோடி மக்களையும் பாதிக்கும் விஷயமாக மாறியிருப்பது தான் தற்போது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஹார்மூஸ் நீரிணை
இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையின் சுமார் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதில் 60-65% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகிறது. இந்த எண்ணெய் பெரும்பாலும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கடந்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து தடை தான் மூலக்காரணமாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தியாவின் வருடாந்திர கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு சுமார் 160-180 பில்லியன் டாலர் வரை இருக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 டாலர் உயர்ந்தாலே, இந்தியாவின் இறக்குமதி செலவு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 15 பில்லியன் டாலர் அதிகரிக்கும். இது இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பை பாதிக்கும் முக்கிய காரணியாகும்.
ஈரான் மீதான போர் அமெரிக்கா - இஸ்ரேல் துவங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை 40 சதவீதம் வரையில் உயர்ந்து தற்போது 100 டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.
கரன்ட் அக்கவுண்ட் டெஃபிசிட் (CAD) அதிகரிப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் கரன்ட் அக்கவுண்ட் டெஃபிசிட் (CAD) அதாவது நடப்பு கணக்கு பற்றாக்குரை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 10 டாலர் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்தியாவின் CAD-ஐ சுமார் 0.4-0.5% வரை அதிகரிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, எண்ணெய் விலை 75 டாலரில் இருந்து 95 டாலராக உயர்ந்தால், CAD சுமார் 1% இலிருந்து 2% வரை விரிவடையும் அபாயம் உள்ளது.
பணவீக்கம் உயர்வு
எண்ணெய் விலை உயர்வு, நாட்டின் பணவீக்கத்தையும் தூண்டும். 10 டாலர் உயர்வு ஏற்பட்டால், நுகர்வோர் விலை குறியீடு (CPI) 0.30-0.40% வரை அதிகரிக்கும். 20 டாலர் உயர்ந்தால் பணவீக்கம் 0.6-0.8% வரை உயரக்கூடும். இது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை நேரடியாக அதிகரிக்கும்.
நிதிச்சுமை
கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அரசு வரி குறைப்புகள் அல்லது சலுகைகள் வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். 10 டாலர் விலை உயர்வு ஏற்பட்டால், சுமார் 20,000-25,000 கோடி ரூபாய் வரை கூடுதல் நிதிச்சுமை அரசுக்கு ஏற்படும். இது நிதிச்சுமையை (Fiscal Deficit) அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கும்.
ரூபாய் மதிப்பு சரிவு
கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பால், டாலர் தேவை உயரும். இதன் விளைவாக இந்திய ரூபாய் மதிப்பு குறையும். பொதுவாக, 10 டாலர் கச்சா எண்ணெய் விலை உயர்வு ரூபாயை 0.5 முதல் 1 ரூபாய் வரை பலவீனப்படுத்தும்.
பொருளாதார வளர்ச்சிக்கு தடைகள்
எண்ணெய் விலை உயர்வு, பொருளாதாரத்திற்கு மறைமுக வரியாக செயல்படுகிறது. பல ஆய்வுகளின்படி, 10 டாலர் உயர்வு ஏற்பட்டால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சுமார் 0.2-0.3% வரை குறையக்கூடும். இது முதலீடுகள் மற்றும் நுகர்வை பாதிக்கும்.
முதலீட்டு சந்தை
இவை அனைத்தும் நாட்டின் முதலீட்டு சந்தையை கடுமையாக பாதிக்கும். முக்கியமான ஏற்றுமதி வர்த்தக பாதிப்பால் வேலைவாய்ப்பு குறைந்து மக்கள் கையில் வருமானம் குறையும். இப்படி கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது தனிப்பட்ட விஷயமாக இல்லாமல் நாட்டின் கடைக்கோடி மக்கள் வரையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு டைம்பாம் ஆக இருக்கிறது. இதன் உண்மையான தாக்கம் வெளியில் தெரியும் போது பல்வேறு பாதிப்புகள் மக்கள் உணர நேரிடம்.


Click it and Unblock the Notifications