உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும், இந்தியர்களைச் சுற்றுலாப் பயணியாக ஈர்க்கவும் விசா பெற வேண்டிய கட்டாயத்தைத் தளர்த்தி வருகிறது. இலங்கை, தாய்லாந்து, மலேசியா வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.
இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் உலக நாடுகள் உடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஈடுபாட்டை வளர்க்க முயற்சியைத் துவங்கியுள்ளது.

ஈரான் நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கா மற்றும் பிற வல்லரசு நாடுகளின் தடையின் காரணமாக முடங்கியிருக்கும் வேளையில், உலக நாடுகள் உடனான தொடர்பு இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அடிப்படையில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் ஈரான் அரசு, 33 நாடுகளின் குடிமக்களுக்கு விசா அவசியத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய அறிவிப்பு மூலம் ஈரான் அரசு சுமார் 45 நாடுகளில் இருந்து மக்களை விசா இல்லாமல் ஏற்றுக்கொள்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையை ஈர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய கலாச்சாரப் பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைச்சர் எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்தார் என ஈரான் நாட்டின் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் கதவுகளை உலகிற்குத் திறக்க அரசாங்கம் விரும்புகிறது. இந்த முடிவு அரசாங்கத்தால் மிகவும் துணிச்சலுடனும், தைரியமாகவும் எடுக்கப்பட்டது என்று எஸதுல்லாஹ் ஜர்காமி தெரிவித்தார்.
வெளி விவகார அமைச்சகத்தின் தகவல் படி தற்போது இந்தியா அரசு அதிகாரிகளுக்கு, அரசுப் பணி நிமித்தமாக ஈரானுக்குச் செல்லும் போது விசா-விலக்கு உள்ளது. இன்றைய அறிவிப்பு மூலம் சாதாரண இந்திய பாஸ்போர்ட்-ஐ வைத்திருப்பவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் கென்யா அனைத்து நாட்டுப் பயணிகளுக்கும் விசா தேவைகளை ரத்து செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications