ஈரான் தற்போது யுத்த பூமியாக மாறி இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை முதல் நடத்தி வரும் கூட்டு ராணுவ தாக்குதல்களில் 700க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் மூத்த அதிகாரிகள் மட்டுமில்லாமல் ஏராளமான அப்பாவி மக்களும் இந்த தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் இஸ்ரேல் மீதும், பல்வேறு வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க கட்டிடங்கள் மீதும் படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணை வீச்சு, குண்டுவீச்சு , டிரோன்கள் மூலம் தாக்குதல் என ஒவ்வொரு நாளும் தாக்குதல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இது சாதாரண மக்களை பெருமளவில் அச்சமடைய வைத்திருக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. கெராஷ் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. ரிக்டர் அளவு கோளில் 4.3 என இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும் போருக்கு மத்தியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது புதிது கிடையாது. இங்கே இருக்கும் டெக்டோனிக் பிளேட்டுகளால் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவது உண்டு.
ஆனால் இப்போது போர் நடந்து வருவதால் பலரும் இது அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட நில அதிர்வாக இருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். கெராஸ் ஈரானின் தெற்கு பகுதியில் உள்ளது. இங்கே ஈரான் தன்னுடைய ராணுவ கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் ஜிசின் யுரேனியம் சுரங்கத்தை அமைத்துள்ளது, அதேபோல இங்கிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் புஷர் அணுசக்தி நிலையம் அமைந்திருக்கிறது.
இங்கே பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகள் ஏதேனும் நடத்தப்பட்டதா அந்த அணு ஆயுத சோதனையின் ஒரு பகுதியாக இந்த நில அதிர்வு ஏற்பட்டதா என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். பூமிக்கு அடியில் இது போன்ற அணு ஆயுத சோதனைகள் நடத்தும் போது நில அதிர்வு உணரப்படும் என சொல்லப்படுகிறது, ஆனால் இது இயற்கையான நில அதிர்வை விட சற்றே வித்தியாசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications