ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் நாட்டு ராணுவம் அமெரிக்க போர் விமானத்தையே சுட்டு வீழ்த்தி இருக்கிறது. அமெரிக்காவும் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளே இல்லை என கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் மோதல்கள் தீவிரமடைந்த வண்ணம் இருக்கின்றன.
இன்றைய தினம் அமெரிக்காவின் நவீன போர் விமானமான f15 என்ற ஜெட் போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இந்த விமானத்தில் இருந்த அமெரிக்க போர் விமானியின் நிலைமை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதற்கு இடையே அவரை பிடித்து தருபவருக்கு பரிசு தருவதாக ஈரான் நாட்டு ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை கடுமையாக கோபமடைய வைத்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீது 2 -3 வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கிடையே மத்திய கிழக்கில் ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை அமெரிக்க அதிகப்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் நாட்களில் இன்னும் போர் தீவிரமடையலாம் என சொல்லப்படுகிறது.
ஈரான் போரால் பல நாடுகளிலும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோடிக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தையை நடத்தப் போவது யார் என்ற கேள்வி உலகம் முழுவதுமே நீடிக்கிறது.

பல்வேறு நாடுகளும் இந்தியா இரு நாடுகளுடனும் சிறந்த நட்புறவை கொண்டிருப்பதால் இந்த அமைதி பேச்சு வார்த்தையை நடைமுறைப்படுத்தலாம் என யோசனை தெரிவித்தன. பிரதமர் மோடி இந்த அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும் என பின்லாந்து நாட்டு அதிபர், அமெரிக்க அரசின் முன்னாள் பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் முந்திக்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் மூக்கறுப்பட்ட நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் போர் தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதை ஈரான் தரப்பு ஏற்கவில்லையாம். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தானில் இருக்கக்கூடிய அமெரிக்க தரப்பு பிரதிநிதிகளை சந்திக்க ஈரான் தரப்பு மறுப்பு தெரிவித்திருப்பதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா தரப்பில் முன்வைக்கக்கூடிய எந்த ஒரு நிபந்தனைகளும் ஏற்கப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறதாம். மேலும் பாகிஸ்தான் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது நம்பகத்தன்மையோடு இருக்காது என ஈரான் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டு நிற்பதாக சொல்லப்படுகிறது.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வந்தால் உலக அரசியலில் பாகிஸ்தானுக்கு பெரிய பெயரை பெற்று தந்திருக்கும். இதற்காகத்தான் பாகிஸ்தான் மிகவும் தீவிரமாக முயற்சி செய்தது. ஈரானுடன் எல்லையை பகிரக்கூடிய நாடாகவும் பாகிஸ்தான் இருக்கிறது. அதேவேளையில் அமெரிக்கா , ஐக்கிய அரபு அமீரகம், சவுதி போன்ற நாடுகளோடும் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கிறது என்பதால் இந்த அமைதி பேச்சு வார்த்தையை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி விடலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டது.
ஆனால் அது தற்போது கை கொடுக்கவில்லை. இதற்கிடையே கத்தார் தரப்பில் முன்னெடுக்கக்கூடிய பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. டிரம்ப் , ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வந்த நிலையில் பாகிஸ்தான் தான் அந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததாக சொல்லப்பட்டது. ஈரான் அதனை ஏற்க மறுத்துள்ளதால், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications