அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது பிப்ரவரி 28ஆம் தேதி கடுமையான ராணுவ தாக்குதலை தொடங்கின. இதில் அயத்துல்லா அலி கமேனி உட்பட தங்களுடைய பல்வேறு முக்கியமான தலைவர்களை ஈரான் இழந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தப்பட்ட போர் நேற்று முதல் அமைதிக்கு வந்திருக்கிறது.
அமெரிக்காவும் ஈரானும் அமைதி பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதால் இரண்டு வார காலத்திற்கு தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிப ர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இது இரு தரப்பு போர் நிறுத்தம் என்றும் கூறினார். இதனை அடுத்து ஈரான் தரப்பும் போர் நிறுத்தத்தை உறுதி செய்தது சரி. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் தலையீட்டால் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

ஈரானை பொருத்தவரை தங்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் அப்போதுதான் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம் என அறிவித்திருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எல்பிஜி, கச்சா எண்ணெய் ஆகியவை கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் ஒரு மாதமாக இந்த கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பல நாடுகளிலும் எல்பிஜி, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்போது போர் நிறுத்தம் அமலில் இருப்பதால் ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமாக கப்பல்கள் செல்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடலில் கண்ணிவெடிகளை வைத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்லும் வழியில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் மற்றும் தஷ்னிம் என்ற புரட்சிகர பாதுகாப்பு படையுடன் தொடர்பு கொண்ட செய்தி முகமை ஆகியவை வெளியிட்டு இருக்கக்கூடிய வரைபடத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. அதாவது போக்குவரத்து வரைபட திட்டத்தில் பாரசீக மொழியில் ஆபத்தான பகுதி என பெயரிடப்பட்ட ஒரு பெரிய வட்டம் இடம்பெற்றுள்ளது. அப்படி என்றால் இந்த பகுதியில் கப்பல்கள் செல்வது ஆபத்தானது என அர்த்தம்.
கப்பல்கள் வடக்கு பகுதியில் லராக் தீவுக்கு அருகே செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே வட்டமிட்ட பகுதி ஆபத்தானது என பாரசீக மொழியில் குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பதால் இங்கே கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை என அதில் தேதியிடப்பட்டிருக்கிறது. தற்போது அந்த கண்ணிவெடிகள் கடலிலேயே இருக்கின்றனவா அல்லது எடுக்கப்பட்டு விட்டனவா என்பது தெரிய வரவில்லை.
போர் சமயத்தில் தங்களை மீறி கப்பல்கள் க்டந்து செல்ல கூடாது என்பதற்காக ஈரான் பாதுகாப்பு படை இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதற்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நேற்று ஒரு நாளில் நான்கு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வெளியே வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அமெரிக்கா தொடர்ச்சியாக தன்னுடைய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய கிழக்கு நாடுகளிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது.
இதற்கிடையே அமெரிக்கா துணை அதிபர் ஜே டி வான்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றனர். இதில் ஈரான் தரப்பு அதிகாரிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications