இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இதில் 60% எண்ணெய் மற்றும் எரிவாயும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் இந்தியாவுக்கு வர வேண்டும். இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை திடீரென ஈரான் மூடி இருக்கிறது.
உலகளவில் மிக முக்கியமான சரக்கு போக்குவரத்து நடைபெறும் பகுதி தான் ஹார்முஸ் ஜலசந்தி. அரேபியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் நடுவில் இருக்கக்கூடிய பகுதி தான் ஹார்முஸ் ஜலசந்தி. இது ஒரு குறுகலான பாதை ஆனால் உலகிற்கே தேவையான கச்சா எண்ணெய் விநியோகம் இந்த பாதை வழியாக தான் நடக்கிறது.

இந்த ஜலசந்தியின் ஒரு பகுதியில் ஈரான் இருக்கிறது, மற்றொரு பகுதியில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இருக்கின்றன. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இந்த ஜலசந்தி வாயிலகாக தான் உலகின் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றன. இங்கே போக்குவரத்து தடைபடுவது உலக கச்சா எண்ணெய் விநியோகத்திலேயே பாதிப்பு ஏற்படும்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கான பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிக்கப்படும். இதனால் அவற்றின் விலை உயரும். இந்நிலையில் ஈரான் அரசு தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஈரான் -ஈராக் போர் நடைபெற்ற 1980களில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது.

தற்போது ஈரான் போர் ஒத்திகையில் ஈடுபடுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் விநியோக பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளீயாகவில்லை.
ஈரான் ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வீசிய ஏவுகணைகள் ஹார்முஸ் நீரிணையில் வந்து விழுந்ததாகவும் பல்வேறு குண்டு வீசப்படும் சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்போது இது திறக்கப்படும் கச்சா எண்ணெய் போக்குவரத்து சீராகும் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்தியா மட்டுமல்ல சீனா, ஜப்பான் நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய்யும் இந்த வழியாக தான் செல்கிறது. எனவே ஒரு நாள் முழுவதும் இந்த பாதை மூடப்பட்டால் கூட ஆசிய நாடுகள் அனைத்திற்குமான கச்சா எண்ணெய் போக்குவரத்தே தடை பட்டு போய்விடும்.
ஒருபுறம் அமெரிக்காவும் ஈரானும் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மறுபுறம் ஈரான் போர் ஒத்திகை நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மூடி இருப்பது பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.


Click it and Unblock the Notifications