ஈரானில் ஒவ்வொரு நாளும் போர் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் நாட்டு முக்கிய அதிகாரிகளை குறி வைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இஸ்ரேலை பொறுத்தவரை அயத்துல்லா அலி கமேனியை முதலில் குறி வைத்து படுகொலை செய்தது. இந்நிலையில் ஈரானின் முக்கிய தலைகள் ஒவ்வொன்றாக வீழ்த்தப்படும் என சூளுரைத்தது. அதன்படி எங்கெல்லாம் தலைவர்கள் மூத்த அதிகாரிகள் பதுங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் தேடி தேடி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஈரான் போரை வழிநடத்தி வந்த தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் அலி லர்ஜானியையும் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது.

ஈரான் நாட்டின் பாதுகாப்பு துறைக்கான உச்சபட்ச தலைவராக செயல்பட்டவர் அலி லர்ஜானி. அவர் ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். இந்த போரை வழி நடத்தி வந்த தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தவர். இந்நிலையில் அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் அவர் தங்கி இருந்த கூடாரத்தை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் துணை ராணுவத்திற்கு தலைமை ஏற்று வந்த சுலைமானும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதே போல துணை தளபதியான சையது கரிஷ் என்பவரும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஈரான் போரில் பெரிய திருப்புமுனையாக மாறி இருக்கிறது.

ஏற்கனவே கமேனி கொல்லப்பட்டார், தற்போது பாதுகாப்பு துறை தலைவர், மூத்த கமாண்டர் ஆகியோரும் இல்லை. இந்த நிலையில் புதிய ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்ட மொஜ்தபா கமேனியும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இருக்கிறார். முன்னதாக கமேனியுடன் மொஜ்தபாவும் இருந்ததாகவும் எதேச்சையாக அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது அந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் கமேனி கொல்லப்பட்ட நிலையில் இவர் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே ஈரானை தற்போது யார் நிர்வகித்து வருகிறார்கள் ஈரான் போரை யார் வழி நடத்தி வருகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அலி லர்ஜானி தான் ராணுவ தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர். கமேனி மரணத்திற்கு பின் ராணுவத்தையும் மத தலைவர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டவர். பல ஆண்டுகளாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பாற்றியவர்.
அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை குழுவில் முக்கிய நபராக பங்கேற்றிருந்தவர். கமேனி மரணத்திற்குப் பிறகு திறம்பட போரை வழி நடத்தி வந்தவர். போரில் பிளவுபடாமல் ஈரான் ராணுவமும் மத தலைவர்களும் ஒற்றுமையாக இருப்பதற்கு உதவியவர். அவரே கொல்லப்பட்டிருப்பதால் ஈரான் போர் அடுத்ததாக எதை நோக்கி செல்லும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அரசையும் ராணுவத்தையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்ததில் முக்கியமானவர், அவருடைய மரணம் ராணுவத்தையும் அரசியலையும் பிரிக்கும் என சொல்லப்படுகிறது. இஸ்ரேல் இப்படி மூத்த தலைவர்களை கொலை செய்வதால் எதிர்காலத்தில் அமைதி பேச்சுவார்த்தை என்ற வாய்ப்பே ஏற்படாமல் போகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications