ஈரான் போர் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. முதலில் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக வழங்கப்பட்டது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காமல் போனதாலும் அதன் விலை பல மடங்கு உயர்ந்ததாலும் ஏற்கனவே உணவகங்களில் உணவுகளின் விலைகள் உயர்ந்து விட்டன. அதேபோல டீ, காஃபி உள்ளிட்டவற்றின் விலைகளும் உயர்ந்து விட்டன. ஈரான் போர் இன்று முடிந்துவிடும் நாளை முடிந்து விடும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்திருந்தாலும் போர் முடிவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

இந்த சூழலில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடிய ஹெச்பி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ,பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கடந்த 15ஆம் தேதி ஒரு முறை, இன்று ஒரு முறை என 2 முறை பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி விட்டன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் அதிகரித்து ரூ.104.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் அதிகரித்து 96.11 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இயற்கை எரிவாயு எனப்படும் சிஎன்ஜி ஒரு கிலோ 93.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்கு நேரடியாக வழிவகுக்கும். ஏனெனில் ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவு இதன் மூலம் அதிகரிக்கிறது.

இதனால் பால் ,காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் என பல்வேறு பொருட்களின் விலை உயர போகிறது. ஏற்கனவே அமுல், மதர் டைரி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்தி விட்டன. மாடர்ன் பிரட் நிறுவனம் பல்வேறு பிரட் வகைகளின் விலைகளை ஐந்து ரூபாய் வரை உயர்த்தி விட்டது.
இனி வரும் நாட்களில் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வது உறுதி. இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து விட்டது எல்பிஜி விலை உயர்ந்து விட்டது மற்றும் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதால் அடுத்து வரக்கூடிய நாட்களில் சில்லறை பணவீக்கம் 0.42% உயரும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அப்படி என்றால் பல்வேறு பொருட்களின் போக்குவரத்து செலவு, சரக்கு செலவு மற்றும் உணவு செலவு அதிகரிக்கும். இது நேரடியாக நம் வீட்டு பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.
பால் விலை உயர்வு, காய்கறி விலைகள் உயர்வு, எல்பிஜி விலை உயர்வு நம் மூன்று வேளை உணவிலேயே கை வைக்கும், அடுத்ததாக எரிபொருள் விலை உயர்வால் சொந்த வாகனம் பயன்படுத்தினால் பெட்ரோல், டீசலுக்கு அதிக செலவு, வாடகை வாகனங்களுக்கு அதிக கட்டணம் என கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஈரான் போரின் தாக்கத்தை படிப்படியாக நம் வீட்டு பட்ஜெட்டில் கை வைக்க தொடங்கி இருக்கிறது. எனவே மக்கள் இயன்றவரை சிக்கனத்தை கடை பிடித்தால் மட்டுமே இந்த சவாலான நாட்களை எதிர்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications

